Aug 18

உலக அளவில் முன்னணி நகரங்களில் மூன்று கனடாவில்

உலக அளவில் மக்கள் விசிப்பதற்கு மிகச் சிறந்த நகரங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள முதல் ஐந்து நகரங்களில், ரொரன்ரோ, வன்கூவர், கல்கரி ஆகிய மூன்று நகரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அனைத்துலக அளவிலான “The Economist” எனப்படும் பொருளாதார சஞ்சிகையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலிலேயே கனடாவின் இந்த மூன்று நகரங்களும் முதன்மை இடத்தினைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலின் முதல் இடத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரமும், இரண்டாவது இடத்தில் ஓஸ்ரியாவின் வியன்னா நகரமும் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நான்காவது ஐந்தாவது இடங்களில் முறையே வன்கூவர், ரொரன்ரோ, கல்கரி ஆகிய நகரங்கள் தேர்வாகியுள்ளன.

அவற்றுள் நிலைத்தன்மையை பேணுதல், சிறந்த சுகாதார நலன்கள், பண்பாடு, சுற்றுச்சூழல், கல்வி, உட்கட்டுமானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ரொரன்ரோ நகரம் ஒட்டுமொத்தமாக 97.2 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

“The Economist” சஞ்சிகையின் பொருளியல் புலனாய்வுப் பிரிவு, மொத்தம் 140 நகரங்கள் மத்தியில் மேற்கொண்டுள்ள இந்த விலாவாரியான ஆய்வில், கனடாவின் மூன்று நகரங்களும், அவுஸ்திரேலியாவின் மூன்று நகரங்களும் முதல் பத்து இடங்களுள் பட்டியலிடப்பட்டுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் நிலைத்தன்மை என்பது வீழ்சியினைச் சந்தித்து வரும் நிலையில், ஒப்பீட்டளவில் கனடா மற்றும அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் நிலைத்தன்மை ஓரளவு பலமாக இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.