Aug 18

இந்த நாயின் அன்பை என்னவென்று சொல்வது!


அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று, தன்னை வளர்த்தவருக்காக 10 வருடங்களாகக் காத்துக்கொண்டிருக்கிறது. நாயை வளர்த்த மிகைல் குஸ்மன், 2006-ம் ஆண்டு இறந்து போனார். அப்போது நாய் வீட்டை விட்டு ஓடிவிட்டது.

சில மாதங்களுக்குப் பிறகு குஸ்மனின் மனைவியும் மகனும் கல்லறைக்குச் சென்றனர். அங்கே நாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பலமுறை கல்லறையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றபோதும் மீண்டும் கல்லறைக்கே திரும்பிவிட்டது. சில மாதங்களில் நாய் திரும்பிவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நாய் கல்லறையை விட்டு வரவில்லை. குஸ்மன் மீது நாய் வைத்திருக்கும் அன்பைக் கண்டு ஆச்சரியப்பட்ட கல்லறை ஊழியர்கள், நாயை அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர். உணவு, மருந்துகளை வழங்கி வருகின்றனர். 2012-ம் ஆண்டு ‘5 ஆண்டுகளாக வளர்த்தவருக்காகக் கல்லறையில் காத்திருக்கும் நாய்’ என்ற தலைப்பில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளிவந்தது.

தற்போது 10 ஆண்டுகளாகிவிட்டன. இன்றும் தன்னை வளர்த்தவருக்காக பகல் முழுவதும் கல்லறையிலேயே காத்திருக்கிறது இந்த நாய். 15 வயதாகிவிட்டதால் பார்வை சரியாகத் தெரியவில்லை. நடக்க முடியவில்லை. ஆனாலும் பராமரிப்பு இல்லத்துக்கோ, குஸ்மன் வீட்டுக்கோ நாய் செல்ல மறுக்கிறது.

“குஸ்மன் இறுதிச் சடங்கின்போது நாய் இந்த ஊரிலேயே இல்லை. பிறகு எப்படி சரியாக அவரது கல்லறையைக் கண்டுபிடித்தது என்று புரியாத புதிராகவே இருக்கிறது. இறந்தவர் மீண்டும் வருவதில்லை என்ற விவரம் புரியாமல், என்றாவது ஒருநாள் பார்த்துவிட மாட்டோமா என்று ஒரு நாயால் எப்படிக் காத்திருக்க முடிகிறது என்பது ஆச்சரியமாகவும் மர்மமாகவும் இருக்கிறது” என்கிறார் நாய் பயிற்சியாளர் அல்டோ சிச்சி.