Apr 03

'ஐ.எஸ்.' ஆல் இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லை: அரசாங்க புலனாய்வுத் தகவல்

இலங்கையில் ஐ.எஸ். அமைப்பின் அச்சுறுத்தல் இல்லை என அரசாங்க புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. 

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு பிரதிநிதி மேஜர் ஜெனரல் ப்ரயன் பென்டன், இலங்கை ஐ.எஸ். தீவிரவாதிகளின்

அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளாக வெளியிட்ட கருத்து தொடர்பில் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைகளில் இந்தப் பிரச்சினை உள்ள போதிலும், இலங்கையில் அவ்வாறான அச்சுறுத்தல் இல்லை. வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால் அவ்வாறான ஒரு தகவல் பதிவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மாலைதீவில் சுமார் 400  ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளார்களென வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

மாலைதீவு நாட்டவர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும் போது விசா பெற்றுக் கொள்ளாமையினால் அந்த நாட்டவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதருகின்றனர்.

அதற்கமைய தீவிரவாதிகள் இந்த நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளமையே இந்த சிக்கல் ஏற்பட காரணம் என அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.