Aug 17

தொழில்நுட்ப கோளாறு: ரொரன்ரோ விமானநிலையத்தில் பயணிகள் தவிப்பு

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானப் பயணிகள் பலமணி நேர தாமத்தினை எதிர்கொள்ள நேர்ந்ததாக கூறப்படுகிறது.

ரொரன்ரோ விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தின் பொதிகளை சேகரிக்கும் செயன்முறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரன்ரோ பெரும்பாக விமான நிலையங்கள் அதிகார சபையின் பேச்சாளர் றொபின் சிமித், இந்த பயணத்தடை நேற்று இரவு 6.30இலிருந்து ஆரம்பமானதாகவும், மூன்றாவது முனையம் ஊடாக வெளியேறும் அனைத்து விமானங்களின் பயணிகளும் இந்த தாமதத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வழக்கமான நேரத்தினை விடவும் தாங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியிருந்ததாக, அந்த முனையம் ஊடாக பயணிக்க காத்திருந்த பயணி ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

தமது பயணம் இலகுவாகவும், வேகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், இணையம் ஊடாகவே தாம் அனைத்துவித பயண முன்னேற்பாடுகளையும் செய்து முடித்திருந்த போதிலும், தமது பயணப் பொதிகளை விமான நிறுவனத்திடம் கையளிப்பதற்காக மாத்திரம் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு்ளளார்.

அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பயணப் பொதிகளை பார்க்கும் போது, மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகவும், அவற்றை விமானங்களுக்குள் கொண்டுசென்று சேர்த்து பயணத்தினை ஆரம்பிப்பதற்கு இன்னமும் பல மணி நேரங்கள் ஆகலாம் என்று தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த தாமத்தினை சமாளிப்பதற்காக மேலதிகமாக 15 பணியாளர்களை வருவித்த விமான நிலைய நிர்வாகம், பயணப் பொதிகளை கைகளால் தூக்கிச் சென்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.