Aug 17

பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீயில் 8,450 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு அழிவு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ந்து பற்றியெரிந்துவரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை சுமார் 8,450 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு நிலப்பகுதி எரியுண்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முறை பிரிட்டிஷ் கொலம்பியாவை காட்டுத்தீ இவ்வாறு தொடர்ந்து பாதித்துவரும் நிலையில், இத்தனை ஆண்டுகளில் கோடை காலத்தில் மட்டும் இவ்வாறான கூடிய அழிவினைச் சந்தித்த காலப்பகுதியாக தற்போதய காலம் பதிவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 1958ஆம் ஆண்டிலேயே இவ்வாறு 8,550 சதுரக்கிலோமீட்டர் பரப்பளவு காட்டுத் தீக்கு இரையான நிலையில், தற்போது நிலவும் காட்டுத்தீ நிலவரம் முன்னைய அளவினையும் விடவும் அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சம் வெளியடப்பட்டுள்ளது.

தற்போதும் மாநிலம் தழுவிய அளவில் 154 இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருவதாகவும், இதுவரை சுமார் 70 வீடுகளும், 118 கட்டிடங்களும் தீக்கிரையாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரிட்டிஷ் கொலம்பிய தீயணைப்பு துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த காட்டுத் தீயில் மிகப் பெரிய காட்டுத்தீ வில்லியம்ஸ் லேக் இற்கு தென்மேற்கு பகுதியில் பற்றியெரிந்து வருவதாகவும், அங்கு மட்டும் சுமார் 2,120 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையாகி இருப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.