Aug 16

பயங்கரவாத தாக்குதலில் பலியான கனேடியர்கள்

மேற்கு ஆபிரிக்க நாடான புர்க்கினா பாசோவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட கனேடியர்கள் இருவரதும் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் இந்த சம்பவத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஒன்ராறியோவைச் சேர்ந்த ரம்மி சென் எனவும், மற்றையவர் கியூபெக்கைத் தளமாக கொண்டு இயங்கும் வறுமை ஒழிப்பு நிறுவனம் ஒன்றில் தொண்டராக பணிபுரியும் பெலெல் டிஃபால்லா எனவும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவரான ரம்மி சென் ரொரன்ரோவில் பிரபலமான முன்னாள் ஆசிரியர் என கனேடிய வெளியுறவுத் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை இரக்கமற்ற இந்த வன்முறைக்கு ரம்மி சென் பலியாகிவிட்டதாகவும், ஆசிரியராக பணியாற்றிய அவர், தனது கலாநிதிப் படிப்பினை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்வதற்காக 2013ஆம் ஆண்டில் ஆசிரிய பணியில் இருந்து விலகிச் சென்றதாகவும் ரொரன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தெரிவித்துள்ளது.

மக்கில் பல்கலைக்கழகம் மற்றும் குயீன்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்துள்ள அவர், “புர்க்கினா பாசோவின் சிறந்த எதிர்காலம்” எனப்படும் கனேடிய அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றினை உருவாக்கி நடாத்தி வருவதுடன், அதன் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல பெலெல் டிஃபால்லா மொன்றியலை தளமாக கொண்டு இயங்கும் CECI எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தில் தன்னார்வ தொண்டூழியராக செயற்பட்டு வருவதாகவும், சுகாதாரம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு விவகாரங்களில் அவர் ஆலோசகராக செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இந்த CECI எனப்படும் நிறுவனமும் புர்க்கினா பாசோவில் செயற்பட்டு வரும் நிலையில், தொண்டூழியப் பணிக்காக அங்கு சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.