Aug 16

தஞ்சக் கோரிக்கையாளர்கள் வீடுகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமம்

கனடாவில் தற்காலிக முகாம்களில் இருந்து வெளியேறும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் தமக்கான வீடுகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரியவருகிறது.

அண்மைய நாட்களாக அமெரிக்க – கனேடிய எல்லைப் பகுதி ஊடாக கனடாவுக்குள் நுளைந்து அரசியல் தஞ்சம் கோரியோரே இவ்வாறான நெருக்கடிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.

கனடாவுக்குள் வந்த பின்னர் தமக்கான அரசியல் தஞ்ச கோரிக்கையினை முன்வைத்த அவர்கள், தற்காலிகமாக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அல்லது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிது காலத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறி தமக்கான வீடுகளை தேடும் முயற்சியில் ஈடுபடும் மக்களில் சிலரே, இவ்வாறு வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகிறது.

நியூயோர்க்கில் இருந்து கடந்த யூலை மாதம் கனடாவுக்குள் வந்த தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், முதலில் பயணிகள் விடுதி, பின்னர் ஒலிம்பிக் அரங்கம், அதன்பின்னர் பாடசாலை வளாகம் என்று அடுத்தடுத்து தற்காலிக இருப்பிடங்களிலேயே மாறிமாறி இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் தஞ்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அவர்களுக்கான தற்காலிக சமூக உதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டவுடன், அவர்கள் தமக்கான சொந்த இடத்தினை தெரிவு செய்யவேண்டும் என்ற நிலையில், அவ்வாறான வீடுகளை தெரிவு செய்வதிலேயே அவர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகிறது.

ஐந்து பேரைக் கொண்ட தமது குடும்பத்துக்கான வீட்டை கண்டுபிடிப்பதற்காக, ஒவ்வொரு நாளும் தான் முடிந்த அளவு தொலைவுக்கு அலைகின்ற போதிலும், இதுவரை தமக்கான ஒரு வீட்டினை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று பிறிதொரு அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.