Aug 14

பில் கிளிங்டன் குடும்பத்தினர் கனடாவில்?

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டன், தனது மனைவி கிளாரி கிளிங்டன் உள்ளிட்ட தனது குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக கியூபெக்ற்கு வரவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகரிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அதி முக்கிய விருந்தினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அவர்கள் வருவதற்கு குறைந்தது சில வாரத்திற்கு முன்னரே ஆரம்பமாகிவிடும் என்று முன்னாள் கனேடிய மத்திய காவல்துறை அதிகாரியும், பாதுகாப்பு ஆலோசகருமான கிறிஸ் மதேர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கும் முன்னதாகவே குறித்த பகுதிகளில் களமிறக்கப்படும் இரகசிய படையினர், கனேடிய மத்திய காவல்துறை அதிகாரிளுடன் இணைந்து, குறித்த அந்தப் பகுதிகளில் போதிய பாதுகாப்பு காணப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்துவார்கள் என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிங்டனும், அவரது குடும்பத்தாரும் கியூபெக்கின் கிழக்கு பிராந்தியமான North Hatleyயில் சில நாட்கள் தங்கியிருப்பார்கள் என்று பிரபல புத்தக ஆசிரியர் ஒருவர் இந்த வார ஆரம்பத்தில் உறுதிப்படுத்தியுள்ளதை அடுத்தே, இவ்வாறான கருத்துகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள பிரபல சுற்றுலா தளம் ஒன்றில் முன்னாள் அதிபர் பில் கிளிங்டனும், அவரது மனைவியும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான கிளாரி கிளிங்டனும், அவர்களது மகளான செல்சியாவும் அவரது இரண்டு பிள்ளைகளும் தங்கவுள்ளதாகவும், நாளை ஞாயிற்றுக்கிழமை அவர்கள் குறித்த அந்த இடத்தினை வந்தடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்த வருகை குறித்த உறுதிப்படுத்தல்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள மத்திய காவல்துறை அதிகாரி ஒருவர், முன்னாள் அதிபர்களின் வருகையின் போது தாமே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்றமை வழக்கம் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர்களுக்கு என்று அவர்களது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள போதிலும், அவற்றுக்கும் மேலதிகமான ஒரு அடுக்கு பாதுகாப்பு தம்மால் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.