Apr 02

மீன்பிடிக்கும் போர்வையில் ஹெரோயின் கடத்தல்: இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது

கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட ஆறு இந்தியப் பிரஜைகளிடம் இருந்து 13.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 162 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

இவர்கள் பருத்தித்துறை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார்.

மீன்பிடிக்கும் போர்வையில் வருகை தந்த குறித்த நபர்கள், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த சிறியரக படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களிலேயே போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டது.