Apr 02

இளைஞர்களின் பலத்தை சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும்: ஜனாதிபதி

திருகோணமலையில் நடைபெற்ற இளையோர் மாநாட்டின் நிறைவு நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பலம் முக்கியமானது எனவும் அதனை சிறந்த முறையில், சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்நிகழ்வில் தெரிவித்தார்.

சர்வதேச சந்தையை அடிப்படையாக வைத்து இளைஞர் சமூகத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட கிழக்குத் தலைவர்கள் ஒன்றிணையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவித்தார்.

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி, அபிவிருத்தியை ஏற்படுத்தி, சிறந்த எதிர்காலத்தை வழங்குவதே அனைத்து கட்சியினதும் கடமையாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களும் இந்நாடு தங்களுக்கு சொந்தமான நாடு என்பதை தலை நிமிர்ந்து சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தும் வகையில், ஒரு நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்நிகழ்வில் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள எல்லோரும் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழியினையும் பேச வேண்டும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அதிவேக வீதியூடாக தெற்குடன் இணைக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்நிகழ்வில் கோரிக்கை விடுத்தார்.