Aug 13

விஜயதாச ராஜபக்‌ஷ பதவி நீக்கப்படுவார்? ஜனாதிபதி, பிரதமர் ஆராய்வு

அமைச்சரவையிலிருந்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவை நீக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆராய்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சரவையிலிருந்து விஜயதாசவை நீக்க வேண்டும் என ஐ.தே.க. எம்.பி.க்கள் கட்சித் தலைமைக்குத் தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் அழுத்தங்களையடுத்தே ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மீது ஐதேகவினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயறசிகளை அவர்கள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான முடிவை விமர்சித்து அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, இவரது அமைச்சின் கீழ் உள்ள சட்ட மா அதிபர் திணைக்களம் முன்னாள் ஆட்சியாளர்களான ராஜபக்சக்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்தடிக்கின்றமை போன்ற விடயங்கள் தொடர்பாக விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

ரவி கருணாநாயக்க பதவியை விட்டு விலகியதும், பாராளுமன்றத்தில் உள்ள பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும் என்று கோரினர். அவர்களுடன் சென்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருண, ஹெக்டர் அப்புகாமி, அசோக பிரியந்த, சாந்த அபேசேகர, சந்திப சமரசிங்க, சமிந்த விஜயசிங்க, கவிந்த ஜெயவர்த்தன, துசித ஜெயமான போன்றவர்களும் விஜேதாச ராஜபக்ச குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அவரை பதவி நீக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியிருந்தனர்.

விஜேதாச ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொள்வார் என்று ஐ.தே.க.வின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே ஜனாதிபதியுடன், பிரதமர் இவ்விடயம் தொடர்பாகப் பேச்சு நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜயதாச ராஜபக்‌ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை எனில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கும் ஐ.தே.க. உறுப்பினர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், அடுத்த ஒரு சில தினங்களுக்குள் இது தொடர்பில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.