Aug 13

கூட்டு ஆட்சியை கலைக்காமல் சமாதான பேச்சு சாத்தியமில்லை

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருக்க கூட்டு எதிர் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டாட்சி அரசாங்கத்தை விட்டு சுதந்திர கட்சி வெளியேற வேண்டும். 

அவ்வாறு அல்லாத நிலையில் சமாதான பேச்சுக்களுக்கோ அல்லது ஆதரவுகளுக்கோ எந்தவகையிலும் வாய்ப்புகள் இல்லை என கூட்டு எதிர் கட்சியிக் செயற்பாட்டாளரும் பாராளுமன்ற  உறுப்பினருமான திலும் அமுனுகம தெரிவித்தார். 

மஹிந்த ஆடசியில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி திருடர்களை பிடிக்க வந்த அரசாங்கம் இன்று தேசிய சொத்துக்களை  வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சுதந்திர கட்சியின் கொள்கையும் அது இல்லை. எனவே தான் அரசாங்கத்திற்குள் இருந்தாலும் அமைச்சர்கள் எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பில் அமைச்சர்கள் வெளிப்படையாகவே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இந்நிலையில் 2020 வரையில் அரசாங்கத்தை ஆட்சி செய்ய விட்டால் அனைத்தையும் நாடு இழந்து விடும். எனவே பொறுப்புள்ளவர்கள் என்ற வகையில் நாட்டிற்கான கடமைகளை செய்து வருகின்றோம். மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர். 

தேசிய தேர்தல் ஒன்றில் அரசாங்கம் தனித்து போய் விடும். ஐக்கிய தேசிய கட்சியும் அரசாங்கத்திற்குள்  உள்ள சுதந்திர கட்சியும் மக்களிக் சாபத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். எனவே முக்கியமானதொரு காலக்கட்டத்தில் நாங்கள் உள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக ஆட்சி அதிகாரம் வரை செல்ல வேண்டும் என்பதே கூட்டு எதிர் கட்சியின் இலக்காக உள்ளது. 

இதற்கான கீழ் மட்ட தயார்ப்படுத்தல்கள் பூரணமாகியுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் என்பற்றில் கூட்டு எதிர் கட்சியின் செல்வாக்கை அரசாங்கம் உணரும். பல முக்கிய அமைசர்ரகள் இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியுடன் பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நாட்களில் பாரிய நெருக்கடிகளை அரசாங்கம் எதிர் கொள்ளும். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் நாளை ஞாயிற்றுக்கிழமை முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளனர். இதன் போது எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் அரசாங்கத்தின் மோசடிகள் உள்ளிட்ட விவகாரங்களை மேலும் சவாலுக்கு உட்படுத்தி நெருக்கடிகளை கொடுப்பது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும். 

எவ்வாறாயினும் கூட்டு எதிர் கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அர்த்தமுள்ள எதிர் கட்சியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி செயற்படுகின்றது. அரசாங்கத்தின் ஊழல்கள் வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.