Aug 13

நீதி அமைச்சர் செய்த தவறு என்ன? விளக்கிறார் ஹர்ஷா

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் குத்தகை காலம் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை ஊடகங்களில் விமர்சித்தமை நீதி நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ செய்த மாபெரும் தவறாகும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இந்நாட்டில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது. தனது சொந்த விருப்பு வெறுப்புக்களையும் தெரிவிக்கலாம். அந்த உரிமை அனைவருக்கும் உள்ளது. அது சிலவேளை சாதகமாகவும் மாறலாம் பாதகமாகவும் மாறலாம். 

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஒன்றை கூறலாம். வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் இன்னொன்றை கூறலாம். ஆனால் இவர்கள் விமர்சிப்பதிலும் பார்க்க அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறுவது முற்றிலும் வேறுபட்டதாகும். இது சிலவேளை பிரச்சினைகளை உருவாக்கலாம்.

இதுவே தற்போது இடம்பெற்றுள்ளது. காரணம் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் குத்தகை காலம் மற்றும் ஒப்பந்த விபரங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை ஊடகங்களில் விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் அனைவரும் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் ஏகமனதாக சம்மதத்தை தெரிவித்திருந்தார்கள்.

அவ்வாறிருக்கையில் அமைச்சரவையில் சம்மதம் தெரிவித்து விட்டு வெளியில் வந்து ஊடகங்களுக்கு அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களை தெரிவிப்பது கூட்டு பொறுப்பு என்ற செயற்பாட்டையே இல்லாமல் ஆக்கியுள்ளது. அவர் தனது தனிப்பட்ட கருத்தைதான் கூறியுள்ளார். ஆனால் அமைச்சரொருவரால் அவ்வாறான கருத்துக்களை வெளியிட முடியாது. 

சம்மந்தப்பட்ட மக்களின் நலன் கருதியே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. விமர்சிப்பதாலும், போலிப்பிரசாரங்களை கூறுவதாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் மழுங்கடிக்க முடியாது என்றார்.