Aug 11

மத்திய ஸ்பெய்னில் காட்டுத் தீ: பொதுமக்கள் வெளியேற்றம்

மத்திய ஸ்பெய்னில் பரவி வரும் கடும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் மும்முரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெய்னில் தற்போது நிலவி வரும் அதிவேகக் காற்று காரணமாக குறித்த காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாகவும் அதனைக் கட்டுக்கு கொண்டு வருவது கடினமான காரியமாக மாறியுள்ளதாகவும் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொடக்கம் பரவி வரும் இந்தக் காட்டுத் தீ காரணமாக, பொதுமக்கள் பலர் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அப்பகுதியில் எஞ்சியுள்ளோரையும் அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீயை கட்டுக்கு கொண்டவரும் பொருட்டு சுமார் 45 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், இந்தக் காட்டுத் தீ பரவியமைக்கான சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.