Aug 11

கனடாவில் வாகனங்களைச் செலுத்திச் செல்வோர் எவ்வளவு மது அருந்தியிருக்கலாம்?

வாகனங்களைச் செலுத்திச் செல்லும் சாரதிகளுக்கு, அவர்கள் உட்கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ள மதுசாரத்தின் அளவினை மேலும் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாநில நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது 100 மில்லிலீட்டர் இரத்தத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ள 80 மில்லிகிராம் மதுசாரத்தினை, 50 மில்லிகிராமாக குறைப்பது குறித்து பரிந்துரைத்துள்ளார்.

இதன் மூலம், மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்திச் செல்வோரால் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், குறித்த இந்த புதிய விதிமுறையினை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்துகளை அறிய ஆவலாக உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சரின் இந்த யோசனை நடைமுறைக்கு வருமாக இருந்தால், சிறிதளவு மதுவினை அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்திச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் இருப்போர், அந்த நினைப்பினை மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.