Apr 01

விஹாரை ஒன்றை அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது; மஹிந்த

விஹாரையோ புத்தர் சிலையோ அமைக்க முடியாத நிலை தற்போது தோன்றியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக் ஷ குறிப்பிட்டுள்ளார்.

பெலியத்தையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே   இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை தற்போது போதை பொருட்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது. போதைப் பொருட்கள் கப்பல்களிலேயே வருகின்றன.

இலங்கையில் தற்போது ஒரு புத்தர் சிலையை அமைக்க முடியவில்லை. விஹாரையை அமைக்க முடியவில்லை. அப்படி அமைத்தால் அதற்கு சீமெந்து எங்கிருந்து கிடைத்தது என இரகசிய பொலிஸார் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கமே இதனை மேற்கொள்கின்றது.

அரசியல்வாதிகளை அடக்கு முறைக்கு உள்ளாக்க முடியும். ஆனால் மதத்தையும் தர்மத்தையும் விஹாரையையும் அடக்கு முறைக்கு உள்ளாக்க முடியாது. அவ்வாறு அடக்கு முறைக்கு உள்ளாக்க முனைந்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம்.

அண்மையில் அரச மரமொன்றை வெட்டிசாய்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதனை வழிபடுபவோரின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

சோழ மன்னர்கள் இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பௌத்த தர்மத்தை அழிக்க முனைந்தனர். ஆனால் எம்மவர்கள் தர்மத்தை பாதுகாத்துள்ளனர்.எமது பிள்ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும்.