Apr 01

பற்றுறுதியில் பின்வாங்கினால் நன்மதிப்பை இழக்க நேரிடும்; சுரேன் சுரேந்திரன் செவ்வி

அரசாங்கம் அதன் பற்றுறுதியில் பின்வாங்குமாக இருந்தால், சர்வதேச சமூகத்திற்குள் நன்மதிப்பை இழக்க நேரிடும் என தெரிவித்துள்ள உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவ்வாறான சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசுக்கு கிடைத்த அதே நிலையையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், ஐ.நா.மனித உரிமை போரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சமகால அரசியல் சமுக நிலைமைகள் தொடர்பாக உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் வழங்கிய விசேட செவ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- ஆட்சிமாற்றம் நடைபெற்று 18 மாதங்கள் கடந்திருக்கின்ற நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- இந்தக் கேள்விக்கு நான் ஒருவரியில் பதிலளிக்க வேண்டுமாக இருந்தால் தவிர்க்கமுடியாத ஏமாற்றம் அளிக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றாததன் காரணமாக பொதுவாக அனேகமான இலங்கையர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபொழுது கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை சுத்தப்படுத்துவோம் என்றும் பல்வேறு வழிகளிலும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்தி நீதியை நிலைநாட்டுவோம் என்றும் கூறியது.

துரதிஷ்டவசமாக, அவ்வாறானவர்களை சட்டப்படி தண்டிக்க முடியாமல் போனதுடன், இவ் அரசாங்கத்தின் மீதும் பல்வேறு விதமான பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள்  நிருவாக சீர்கேடும் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன. 

வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு பெருமளவில் திரண்டு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். அவர்கள் புதிய அரசாங்கம் அரசியல் யாப்பில் சீர்திருத்தங்களைச் செய்து தசாப்தங்களாக நீடித்திருக்கும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்றும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைய நீதிகிடைக்கும் என்றும் அந்த மக்கள் நம்பினர். 

கடந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகள் குறித்து குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய குற்றச் செயல்கள் குறித்து உரியமுறையில் தலையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிhத்து பெருமளிவில் வெளிப்படையான கண்டனக் குரல்கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். 

அபகரிக்கப்பட்ட காணிகள் ஒருசில மாதங்களுக்குள் சட்டபூர்வ உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும் என்றும், உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளதைப் போன்று வடக்கு-கிழக்கிலும் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்படும் என்றும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் விசேட முன்னுரிமை அளிக்கப்பட்டு அவைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கேற்ப முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்தியை எட்டுவதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் குறைந்தபட்சம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களைப் போன்றாவது ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்றும் தமிழ் மக்கள் நம்பினர். 

இத்தகைய சமூகங்களின் தற்போதைய ஏமாற்றகரமான உள்ளக்கிடக்கையைப் பிரதிபலிப்பதாகவே கடந்த பல மாதங்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.  

எது எப்படியிருப்பினும், ஒட்டுமொத்தத்தில் போகும்வழி சரியானதாகவே தெரிகிறது.  இந்த அரசாங்கம் அச்சமின்றி சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக வெளியை உருவாக்கியிருக்கிறது. பொதுவாக அனைத்து சுயாதீன ஜனநாயக நிறுவனங்களும் அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்த 18ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்திருக்கிறது. நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்டதுடன், ஐ.நாவுடன் நெருக்கமாக இணங்கிச் செயற்படுவதிலும் ஏனைய உலக நாடுகளுடன் நெருக்கத்தைப் பேணுவதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் ஈடுபட்டுவருகிறது.

இராணுவம் மற்றும் இதர அரச நிறுவனங்களினால் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகள் சிலவற்றை விடுவித்துவருகிறது. சில அரசியல் கைதிகளை விடுவித்துள்ளதுடன், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சிவில்  சமுகத்தைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக அறிமுகப்படுத்திவருகிறது.

கேள்வி:- ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் குறித்து உலகத்தமிழர் பேரவை தனது நிலைப்பாட்டை மாற்றியமைக்கு காரணம் என்ன? 

பதில்:- உலகத் தமிழர் பேரவையினராகிய நாம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இலங்கையின் ஆட்சி மாற்றத்தில் நாமும் ஒரு சிறிய பங்காற்றியுள்ளோம் என்று நினைக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உலகத் தமிழர் பேரவை மட்டுமே ராஜபக்சவை வீழ்த்துவதற்கு அதிக அளவில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு எமது மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. 

இணைந்த மற்றும் ஆக்கபூர்வமான செயற்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்களில் செல்வாக்கு செலுத்த முடியும் என்று உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை கொண்டுள்ளது.; நாம் வெளியுறவு அமைச்சர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தரைகளை பலமுறை சந்தித்துள்ளதுடன் இரண்டுமுறை ஜனாதிபதியையும் சந்தித்துள்ளோம்.

அரசாங்கத்தின் முற்போக்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்ற அதேவேளை அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அல்லது பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சிப்பதிலிருந்து உலகத் தமிழர் பேரவை வெட்கப்பட்டு ஒதுங்கியிருக்காது.

கேள்வி:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு தேசிய அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகள் உங்களது மதிப்பீட்டின் பிரகாரம் எவ்வளவு தூரம் நடைமுறைப்பபடுத்தப்பட்டுள்ளன என கருதுகின்றீர்கள்?

பதில்:- செயற்பாடுகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதுடன், குறைவாகவும் உள்ளன. மனித உரிமைகள் ஆணையாளர் தமது அறிக்கையில் 'கவலை அளிக்கும்விதத்தில் மெதுவானது' என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் ஐ.நா. தீர்மானத்தின் A/HRC/30/L.29ஆவது பிரிவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு இன்னமும் தொடர்கிறது. எனவே, தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும்வரை, இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும். முறையான கண்காணிப்பும் அவதானிப்பும் பிரிதொரு தீர்மானத்தின் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும் என்றதனால் தான் அதனை ஆதரித்தோம்.

அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியும் நாட்டு மக்களின் சார்பாக தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பானதாகவும் திகழ்கிறது. இலங்கை தொடர்ந்தும் 30/1 தீர்மானத்தை நிலுவையின்றி தவறாமல் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் ஆற்றிய உரையை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அங்கு உரையாற்றுகையில், 'கடந்தகால நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும், அனுபவங்களையும் குத்துக்கரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு எங்களை எடைபோடாதீர்கள்..... கனவான்களே சீமாட்டிகளே என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், முன்னேற்றத்திற்குத் தேவையான வேகத்தை உருவாக்குவதற்கும் முற்போக்காக முன்னேறிச் செல்வதற்கும், அர்த்தம் பொதிந்த நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு ஒரு புதிய இலங்கையை உருவாக்குவதற்கும் எங்களை நம்புங்கள், நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காக எங்களுடன் கைகோருங்கள்' எனக் கோரியிருந்தார்.

செயலாற்றலில் ஏற்பட்ட பின்னடைவிற்கு இலங்கை அரசாங்கம் நாட்டின் அரசியல் யதார்த்த நிலையை ஒரு காரணமாக முன்வைக்கலாம். இந்த தீர்மானம் நிறைவேற்றுவதில் தமதித்தமைக்கு ராஜபக்சவையும் கூட்டு எதிராணியினரையும் மட்டுமே காரணியாக முன்வைப்பது ஒட்டுமொத்தத்தில் பிழையான கற்பிதமாகும். பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் கூட்டு எதிரணியினரில் வெறும் 51 உறுப்பினர்கள் மட்டுமே. உண்மையில் கூட்டு எதிரணியினரால்; இதுவரை காலமும் அரசாங்கத்தை அச்சுறுத்தக்கூடிய வகையில் எத்தகைய செயற்பாடுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை.

இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 2015ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியபோது நாம் அதனை ஊக்குவித்திருந்தோம். அத்தீர்மானம் யுத்தத்தின்போது இருதரப்பினரும் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தமையை ஏற்றுக்கொண்டிருந்தது. அது இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பாரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. மே 18 அன்று தமது உறவுகளை நினைவு கூருவதற்கான  வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தமையை நாம் வரவேற்றிருந்தோம்.

அத்துடன் மனித உரிமைகள் பொறிமுறையில் குறிப்பிடத்தக்க அளவில் ஐ.நா.வின் முகவரங்கங்களுடன் இணைந்து பணியாற்றியதையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அலுவலகத்தை நிறுவுவதற்கான முன்னெடுப்பில் ஈடுபட்டு 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதையும் நாம் வரவேற்றிருந்தோம். ஆனால் ஏழுமாதங்கள் கடந்த பின்னரும் இன்றுவரை அது வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை. வர்த்தமானியில் வெளியிடப்படுவதானது நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை ஆலோசனை செயலணியினால் ஜனவரி 3, 2017அன்று வெளியிடப்பட்ட நல்லிணக்க பொறிமுறைக்கான பரிந்துரைகளை முறைப்படி வரவேற்றிருந்தது.

இருப்பினும் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயத்தில் மிகக் குறைந்த அளவே நடைபெற்றிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. உலகத் தமிழர் பேரவை நெருக்கடி நிலையை தணிப்பதற்கான நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்தின் முயற்சிகள் போதுமானதாக இல்லாததையிட்டு ஏமாற்றமடைந்துள்ளது. 

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு, சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடு உள்ளிட்ட நிறுவன சீர்திருத்தங்கள் என்பவை அத்தியாவசியமானவை. ஆனால் தற்போதைய சூழலில் அவைகள் தேவைப்படுவதைவிட மிகவும் குறைவாகவே உள்ளன. மேலும்பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதிவழங்குவதற்குமான செயற்பாடுகளின் ஒவ்வொரு நிலையிலும் இதயசுத்தியுடனானகலந்துரையாடல்களை மேற்கொண்டு முக்கியமான நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு அரசாங்கம் தாமதமின்றி முன்வரவேண்டும்.

யுத்தக் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் இரண்டு தரப்பினரும் ஏராளமாகக் குற்றமிழைத்திருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவைகள் தற்போதைய நீதிப்பொறிமுறையில் குற்றங்களாக அடையாளம் காணப்படவில்லை. இவைகள் குற்றங்கள் என அடையாளம் காணும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமியற்றப்படவேண்டும். இவை இன்னமும் ஆரம்பிக்கப்படக்கூட இல்லை. நட்டஈடு வழங்குவது குறித்து இதுவரை கலந்துரையாடல்கள்கூட ஆரம்பிக்கப்படவில்லை. அல்லது குறைந்த அளவில் நடைபெற்றுள்ளது என்பதும் முக்கியமானது. 

கேள்வி:- இரண்டு வருட கால அவகாசத்தில்  அரசாங்கம் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் எனக் கருதுகின்றீர்களா?

பதில்:- கடந்த பதினெட்டு மாதகால அனுபவத்தைச் சீர்தூக்கிப் பார்க்கையில், அரசாங்கம் 30ஃ1 தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் என்று நம்பி நான் என்னிடம் உள்ள கடைசி நாணயத்தையும் பந்தயமாக வைக்க விரும்பவில்லை. இருப்பினும், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 34/1 இன் தீர்மானத்திற்கும் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதன் மூலம், மீண்டும் ஒருமுறை அது சர்வதேசரீதியில் பற்றுறதியுடன் செயல்படவேண்டும்.

இந்த இடத்தில் நான் மீண்டும் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஆகவே அரசாங்கம் அதன் பற்றுறுதியில் பின்வாங்குமாக இருந்தால், அது சர்வதேச சமூகத்திற்குள் நன்மதிப்பை இழக்க நேரிடும் என்பதுடன் அதே சமயத்தில் ராஜபக்ச அரசுக்கு கிடைத்த அதே நிலையை இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படுத்தும்.

கேள்வி:- கலப்பு பொறிமுறையை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்ற நிலையில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரும் இந்தப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?

பதில்:- இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் ஐநா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் போன்ற சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இலங்கை அரசாங்கம் 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்களுக்கு இணைஅனுசரணை வழங்கியதன் மூலம் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்ற எடுத்துக்கூறும்படி நாம் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்வோம். 

அத்துடன் அடுத்த சில மாதங்களில் ஜி.எஸ்பி பிளஸ் போன்ற பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டால் அவற்றை மீளப்பெறும்படி கோருவோம். ஒரு அமைப்பு என்ற வகையில் அந்தந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மதிப்பிட்டு தகவல்களின் அடிப்படையில் எமது அடுத்த கட்ட பணிகளை உருவாக்குவோம். 

கேள்வி:- சமஷ்டிக் கோரிக்கை, வடக்கு கிழக்கு இணைப்பு ஆகியவற்றை நிராகரித்துள்ள தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என கருதுகின்றீர்களா?

பதில்:- எதிர்கால சந்ததியினர் பாதுகாப்புடனும் அமைதியும் சமாதானமுமான இலங்கையில் வெற்றிகரமாக வாழவேண்டுமானால் புதிய அரசியல் யாப்பினை அமுல்படுத்துவது; மட்டுமே  நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரே வழியாகும். மிதவாத கண்ணோட்டமுள்ள தலைவர்களை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய அரசாங்கம் பதவியில் இருப்பதும் மிகவும் பொருத்தமான தமிழ் தலைமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதும் கடந்த இரண்டு பாரிய தேர்தல்களிலும் இரண்டு சமூகங்களினதும் தீவிரவாத சக்திகளை மக்கள் பெருந்திரளாக ஏற்க மறுத்திருப்பதுமான இன்றைய அரசியல் சூழலில், ஒரு புதிய அரசியல் யாப்பை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணமாகத் தெரிகிறது. ஆகவே நாம் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

கேள்வி:- வடக்கு கிழக்கில் இராணுவப்பிரசன்னம், காணமலாக்கப்பட்டோருக்கான விடயம், அரசியல் கைதிகள் விடயத்தில் எவ்விதமான முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்காத நிலையில் அடுத்த கட்டமாக எவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும் என கருதுகின்றீர்கள்?

பதில்:- ஒரு நிறுவனம் என்ற வகையில் உலகத் தமிழர் பேரவை அரசாங்த்தின் செயலாற்றல்களில் தொடர்ச்சியாக ஏற்படும்  பின்னடைவுகளை தொடர்ந்தும் அம்பலப்படுத்தும். சாத்தியப்படும் ;போதெல்லாம் நாம் எமது ஏமாற்றங்களை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தெரிவிப்போம். இலங்கை தனது மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யாத வரையில், இலங்கையின் நன்மதிப்பு சர்வதேச அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்படுவதுடன் வெளிநாட்டு மூலதனங்கள் மற்றும் முன்னுரிமை வழங்கி கவனிக்கப்படும் விடயங்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும்.

கேள்வி:- எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகள் சரியான பாதையில் செல்கின்றதெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- இரண்டு பாரிய தேர்தல்களிலும் இரண்டு சமூகங்களையும் சேர்ந்த தீவிரவாதப் போக்குடையவர்களை மக்கள் திரண்டெழுந்து நிகாரித்து மிகவும் பொருத்தமான தமிழ் தலைமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளமை இலங்கை வரலாற்றில் மிகவும் சிறப்பான காலமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல்தொகுதிகளில் அதிகரித்துள்ள ஆதரவின் மூலம் அது தனது; நன்மதிப்பை இலங்கையில் நிரூபித்தது மட்டுமன்றி, அது சர்வதேச சமூகத்தினுள்ளும் தனது அரசியல் தந்திரத்தின் மூலம் பெருவாரியான நன்மதிப்பைப் பெற்றுள்ளது. 

கேள்வி:- கூட்டமைப்பினுள் சில முரண்பாடான கருத்தியல் நிலைமைகள் அண்மைக்காலமாக காணப்படுகின்றன. அக்கட்டமை வலுப்படுத்துவதில் உங்களின் வகிபாகம் எவ்வாறுள்ளது?

பதில்:- கட்சிகளுக்கிடையில் அவ்வப்போது மனக்கசப்புக்கள் வருவது இயல்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது பல கட்சிகளைக் கொண்ட அமைப்பாகும். ஆகவே குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் ஒத்துப்போகாத நிலை என்பது ஒரு ஜனநாயக குழுச் செயற்பாட்டில் ஆரோக்கியமான விடயமாகவே இருக்க வேண்டும். இவைகளெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சிப் பிரச்சினை இவைகளை வெளிச்சக்திகளின் துணையின்றி; காத்திரமாகக் கையாளும் வல்லமை அதன் தலைமைக்கு இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏதேனும் தவறான புரிந்துணர்வுகள் எஞ்சியிருக்குமானால் அதனையும் பொருத்தமான முறையில் தீர்த்துக்கொண்டு எதிர்கால ஜனநாயக சோதனைகளில் வெற்றிகரமாக முன்னேறிச் செல்லும் ஆற்றல் அதற்கு இருக்கின்றது என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன்.

கேள்வி:- புலம்பெயர் தேசங்களில் புலிகளின் ஆதரவாளர்கள் செயற்பட்டுவருகின்ற நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு முன்னாள் விடுதலைப்போராளிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல விடயம் சம்பந்தமாக உங்களது அமைப்பு பிரத்தியேகமாக நடவடிக்கைகளை எதுவும் எடுத்தா?

பதில்:- பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது இலங்கையின் வடக்கில் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை உலகத் தமிழர் பேரவை எத்தகைய தயக்கமுமின்றி கண்டித்திருந்தது. 

பாராளுமன்ற உறுப்பினர்டி எம்.ஏ. சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் வைத்துக் கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுடன் உலகத் தமிழர் பேரவை மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தது. அத்தகைய கீழ்த்தரமான திட்டத்தை செயற்படுத்த முயற்சித்தவர்களுக்கு நாம் எமது கண்டனத்தை வெளிப்படுத்தியதுடன் முழுமையான விசாரணைகளை நடத்தி திட்டம் தீட்டியவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் சுமந்திரன் 2009ற்குப் பின்னரான தமிழ் மக்களுக்கான அரசியலில் முக்கியமான பாத்திரமேற்றுள்ளதுடன், இலங்கையில் அதிலும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்காக பாரிய முயற்சிகளையும் எடுத்து வருகின்றார். உலகத் தமிழர் பேரவையும் புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மக்களின் அபிலாசைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்காக அவர் துணிச்சலுடனும், உற்சாகத்துடனும் சட்டரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதனூடாகவும் குறிப்பாக அரசியல் யாப்பினூடான செயற்பாடுகள் மூலம் மேற்கொள்வதற்கு நன்றி செலுத்துகின்றனர்.

கேள்வி:- உலகத்தமிழர் பேரவை இலங்கை தமிழர் விடயத்தில் நியாமான தீர்வுக்காக எவ்வாறான செயற்பாடுகளை தற்போது மேற்கொள்கின்றது?

பதில்:- இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பிரதிநிதிகளுடன் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருக்கமான உறவைப் பேணிவருவதில் உலகத் தமிழர் பேரவை புலம்பெயர் அமைப்பு என்ற வகையில் பெருமிதம் கொள்கிறது. வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் நாம் தமிழர்களின் மீது கூர்ந்த பார்வையையும் தீட்டிய காதுகளுடனும் செயலாற்றி வருகின்றோம். 

சர்வதேச அரங்கில் நாம் தமிழ் மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். நாம் தற்போதைய அரசாங்கத்துடனும் பல்வேறு அரசாங்கங்களுடனும் அரசு சாரா நிறுவனங்களுடனும் இலங்கையில் உள்ள நிறுவனங்களுடனும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

சட்டத்தரணி லால்விஜேநாயகவின் தலைமையிலான பத்தொன்பதுபேர் கொண்ட மக்கள் பிரதிநிதித்துவக் குழவிடம் நாம் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக எமது முன்மொழிவுகளை வழங்கியுள்ளோம். 

கேள்வி:- கொள்கை ரீதியில் புலம்பெயர் அமைப்புக்கள் வேறுபட்டுள்ள நிலையில் ஒருமித்து பயணிப்பதற்காக நடவடிக்கைள் எதும் எடுத்தீர்களா?

பதில்:- இலங்கையில் வாழும் எமது மக்கள் அனைவரின் நலன்சார்ந்தே அடிப்படையில் அனைத்து அமைப்புக்களும் நல்ல நம்பிக்கையுடன் பாடுகின்றன. எமது மக்களின் நியாயமான குறைகளைத் தீர்ப்பதற்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்தான அணுகுமுறை மற்றும் தந்திரோபாயங்களில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம்.

ஒட்டுமொத்த திட்டத்தில் இத்தகைய வித்தியாசங்கள் சில வேளைகளில் ஆரோக்கியமானவையாகவும் இருக்கலாம் என்று ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

உலகத் தமிழர் பேரவை இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் பொதுவான வேலைத்திட்டத்தை முன்வைத்து இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் ஒன்றை தயாரிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தோம். நாம் இருபத்தொரு விடயங்களை இணங்கியிருந்தோம். இருப்பினும் இரண்டு அடிப்படை விடயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 

இந்த வேலைத்திட்டம் மூலமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உலகத்தமிழர் பேரவையும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இணைந்து செயற்படுகளை முன்னெடுப்பதற்கு   எல்லைக்கல்லாக அமைந்தது.

கேள்வி:- வடக்கு கிழக்கில் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டபல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கு உங்களது அமைப்பு எவ்வாறான உதவிகளை அளித்துள்ளது? அல்லது அது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையைக் எடுக்கவுள்ளது?

பதில்:- இலங்கை மக்களின் சமூக பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பணியில், அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச உதவியுடன் பணியாற்றுவதும் உலகத் தமிழர் பேரவையின் நான்கு பிரதான தந்திரோபாய நோக்கங்களில் ஒன்று.

உலகம் முழுவதிலும் சுமார் ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர்கள் புலம்பெயரந்து வாழ்கின்றனர். இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமனான அல்லது அதைவிட கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான தகுதி எம்மிடம் இருக்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுகாதார நிபுணர்களாகவும், பொறியியலாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், வங்கியியலாளர்களாகவும், சமூக ஊழியர்களாகவும், பொருளியல் நிபுணர்களாகவும், ஆசிரியர்களாகவும், தொழில்நுட்பவியலாளர்களாகவும், மெக்கானிக்குகளாகவும், கலைஞர்களாகவும் இன்ன பிற துறைசார்ந்த வல்லுனர்களாகவும் திகழ்கின்றனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த தமிழ் குழந்தைகளில் 85மூ உலகம் முழவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர்.

அமைதியான பாதுகாப்பான சமாதானமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பல்வேறு வழிகளில் ஆதரவளிக்க முடியும். ஒரு சமூகம் வெற்றி பெறுவதற்கு அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டெழுவதற்கு பொருளாதார மற்றும் சமூக வேலைவாய்ப்பு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது. வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற சிறிய அளவிலான முதலீடுகள்கூட வடக்கு-கிழக்கு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப உதவும்.

ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யுத்தத்தினால் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் ஒட்டுமொத்த கிராமப் புறங்களிலும் குறிப்பாக வடக்கு-கிழக்கில் பொதுச்சுகாதார நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளது. யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஏராளமானவர்கள் தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இத்தகைய பிரச்சினைகளை முகங்கொடுப்பதற்கு மருத்துவ சுகாதார தொடர்புடைய வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் குழந்தைகள் அன்னிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர்களாகத் திகழ்கின்றனர் அவைகளையும்கூட பகிர்ந்துகொள்ள முடியும்.

சிவில் சமூக இயக்கங்களை உருவாக்குவதும் வலுப்படுத்துவதும் அடுத்துள்ள மிகவும் முக்கியமான முயற்சியாகும். திறன் விருத்திக்கும், திறமைகளைக் கட்டியெழுப்புவதற்குமான பயிற்சிகளை வழங்குவதற்கும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்வதற்கும் உதவும்.  இதுவே தாயகத்தில் வளர்ந்துவரும் நிலையான குழுக்களை இயலுமானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உருவாக்கி சமூக மீட்டெடுப்புக்கான அத்திவாரமாகவும் அமையும். 

சிவில் சமூக இயக்கங்கள் என்று நான் குறிப்பிடுவது, அரசியல் சார்பற்ற நேர்மையான சிவில் சமூக குழுக்களையே அன்றி, இரகசிய அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தைக் கொண்டு தங்களை சிவில் சமூக குழுக்களாக பிரகடனப்படுத்திக்கொள்ளும் குழுக்களை அல்ல. துமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் சமுகம் சர்ந்த அரசியல், சிவில்  கட்டமைப்புக்களுக்கும் திறன் மற்றும் ஆளுமை விருத்தி வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

நன்றி வீரகேசரி