Apr 01

தீர்வு கிடைக்கும் வரை நகரமாட்டோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தாயகம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத்தவிர்ப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டங்கள் எதுவித முடிவும் எட்டப்படாத நிலையில் இன்றும் தொடர்ந்தது.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும்,இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 37 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம் பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று 42 ஆவது நாளை எட்டியுள்ளது.

இது மாத்திரமன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலும் நேற்று 26 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தில் மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்திலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம் மேற்கொள்ளப்படுகிறது. 

 திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 28 ஆவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.