Apr 01

இந்த அரசும் எம்மை ஏமாற்றுமானால் மக்களோடு இணைந்து போராடுவோம்: மாவை

கடந்தகால அரசுகளைப் போல் தற்போதுள்ள அரசாங்கமும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் ஜனநாயக வழியில் மக்கள் நடத்திவரும் போராட்டங்களை அவர்களோடு இணைந்து மேலும் வலுப்படுத்தும் நிலை நிச்சயம் உருவாகும். உரிமைகளைப் பெற சர்வதேசத்தின் ஆதரவையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம்.

இவ்வாறு தமிழரசு கட்சியின் தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவேண்டும். படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்கள் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மைகள் வெளியிடப்படவேண்டும். 

இவற்றை நாங்கள் முன்னைய அரசுகளிடமும் தற்போதுள்ள அரசிடமும் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும் நன்மைகள் எவையும் உடனடியாக கிடைக்கவில்லை.

இந்நிலையில் மக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இந்த அரசாங்கமும் கடந்தகால அரசாங்கங்களைபோல் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் மக்கள் போராட்டங்களை நாங்கள் வலுப்படுத்தும் நிலை நிச்சயம் உருவாகும் எனவும் அவர் கூறினார்.

தந்தை செல்வநாயகத்தின் 119 ஆவது பிறந்த நாள் நிகழ்வு தந்தை செல்வா சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார்..

தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆழும் தன்னாட்சி உரிமைக்காக மிக நீண்டாகாலம் உழைத்தவர் தந்தை செல்நாயகம். இன்றளவும் மக்கள் அவரிடமிருந்தும், அவருடைய கொள்கையிலிருந்தும் பிரிந்திருக்கவில்லை. அந்த கொள்கைகளுக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.