Aug 09

சூரிய, சந்திர கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள் அச்சம் அடையத் தேவையில்லை! நக்கீரன்

இந்திய புராணங்களில் சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கு உள்ள இரண்டு எதிரிகளான ராகுவும் கேதுவும் சந்திரனை பிடித்து கொல்ல முயற்சி செய்கின்றனர் எனவும் ஒவ்வொரு முறையும் நிலா அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்கிறறு  என்பதாக புராணிகர்கள் எழுதி வைத்துள்ளனர்.

கிரகண காலத்தில் நீர் அருந்தகூடாது, உணவு உண்ணக்கூடாது, கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது, மனநலம் பாதிக்கப்படும் எனச் சோதிடர்களும் கோயில் பூசாரிகளும் மக்களைப்  பயமுறுத்தி வைத்துள்ளார்கள். இன்னும் சிலர், கிரகணத்தைப் பார்ப்பதால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும் நல்லது நடக்கும் என்றும் சொல்கிறார்கள். 

ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிரகணம் என்றால்  பொது மக்களிடம் ஒருவித  அச்சம் இருந்தது. கிரகணம் முடியும் வரை  சமைக்காமல் இருப்பது, பின் குளித்துவிட்டு சமைத்துச் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கிரகணத்தின் போது கோயில் நடை சாத்தும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

அறிவியல் வளர்ச்சி காரணமாக இப்போதெல்லாம் கிரகணம் வந்து போவதையிட்டுப்  பெரும்பான்மையோர் கவலைப்படுவதில்லை.

சூரியன், புவி, நிலா ஆகிய மூன்றும்  ஒரு நேர்க்கோட்டில் வரும் போது  சந்திர - சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  இந்த மூன்றில்  நட்சத்திரமான சூரியனுக்கு மட்டுமே சுய ஒளி உண்டு.

சூரியன், புவி, நிலா நேர்க்கோட்டில் வரும் போது  சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சூரியன், நிலா, புவி  நேர்க் கோட்டில் வரும் போது  சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

கிரகணம் என்றால் மறைப்பு என்ற பொருள். எப்போதும் சுய ஒளி உள்ள சூரியன் மட்டுமே மறைக்கப்படும்.  

சூரியன், புவி,  நிலா நேர்க் கோட்டில் வரும் போது புவியின் நிழல் நிலா மீது படிகிறது.   இது சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது.  மறுபுறம் சூரியனுக்கும்  புவிக்கும் இடையில் நிலா வரும்போது சூரியனை   நிலா மறைத்துவிடுகிறது.  இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதனை இப்டியும் சொல்லலாம்.

புவி மறைத்தால், அது சந்திர கிரகணம். அதாவது, சூரியனை புவி மறைத்தால்  நிலா இருட்டாகி விடும். இதுதான் சந்திர கிரகணம்.

நிலா மறைத்தால் அது சூரிய கிரகணம் எனப்படும்.  அதாவது, சூரியனை நிலா மறைத்தால், புவி இருண்டு விடும். இதுதான் சூரிய கிரகணம் ஆகும்.  சூரியனை  புவி அல்லது நிலா முற்றாக மறைத்தால் அது முழுக் கிரகணம். சூரியனை பாதியாக மறைத்தால் அது பாதிக் கிரகணம்.

சந்திர கிரகணம் பவுர்ணமி நாளில்தான் இடம் பெறும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் இடம் பெறும்.

நேற்று ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பாதிச் சந்திரகிரகணம் இடம்பெறுகிறது. சிறிலங்கா உட்பட  ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்காவின்  கிழக்குப் பகுதி, பசிபிக், வட துருவம், தென்துருவத்தில்  கிரகணம் இடம்பெறுவதைப் பார்க்க  முடிந்தது.  

இந்தச் சந்திர கிரகணம் இலங்கையில் இரவு  9.20 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 2.21 மணிக்கு முடிந்தது. இரவு 11.51 மணிக்கு நிலா புவியின் இருண்ட நிழல்பகுதிக்குச் சென்றது. பின்னர் இரவு 12.48 இருண்ட பகுதியை விட்டு நீங்கியது.  இந்த கால இடைவெளியில்  நிலாவின் 25 விழுக்காடு மேற்பரப்பை  புவியின் நிழல் மறைத்துவிட்டது.

நிலவு புவியின் ஒரே துணைக்கோள். நிலா புவியிலிருந்து 384,403 கிமீ தொலைவில் இருக்கிறது. நிலவின் விட்டம் 3,474 கிமீ ஆகும். புவியின் விட்டம் 12,742 கிமீ ஆகும். அதாவது நிலாவின் அளவு புவியைவிட 27 விழுக்காடாகும்.

 நிலவு புவியை முழுதாய் சுற்றி வருவதற்கு 27.322 புவி நாட்கள் ஆகிறது. அது தன்னைத்தானே சுற்றுவதற்கு 29.5 நாட்கள் ஆகிறது.  இந்தக் காலம்  இரண்டும் ஒன்று போல இருப்பதால் புவியிலிருந்து நிலவின் ஒரே பகுதியை மட்டுமே புவியில் இருந்து பார்க்க  முடிகிறது.

இது ஒரு புறம் இருக்க இந்த மாதம் ஓகஸ்ட் 21,2017 அன்று  99 ஆண்டுகளுக்குப் பின்னர்  முழு சூரிய கிரகணம் வட  அமெரிக்காவில் இடம் பெறுகிறது. அப்போது சூரியனை சந்திரன்  3 நிமிடங்கள் முழுவதும் மறைத்தவிடும்.  இந்தத் தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.   இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும். அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக சூரிய கிரகணம் தெரியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. வட  அமெரிக்காவில் உள்ளவர்கள் சூரியன் நிலாவின் பின்புறத்தில் மறைவதைக் காணலாம். அப்படி மறையும் போது பகல்  மைமல் பொழுதாக மாறும். புவியின் வெட்பம் துரிதகெதியில் வீழ்ச்சி அடையும். வானம் இருண்டு காட்சி அளிக்கும்.

கனடாவில் வன்கூவர் மக்கள் பகுதியளவான (partial) சூரிய கிரகணத்தையே பார்க்க முடியும்.  ரொறன்ரோவில் பார்க்க முடியாது. கிரகணத்தின் போது சந்திரன் பேரளவு சூரியனை மறைக்கும்.  விக்ரோறியா, வன்கூவர் மற்றும் எட்மொன்ரன் நகரங்களில் உள்ள Royal Astronomical Society  இந்த சூரிய கிரகணத்தை தமது வானிலை ஆய்வு கூடங்கள் வழியாகப் பார்க்க ஒழுங்கு செய்துள்ளது.

சூரிய கிரகணத்தைப் பொது மக்கள் வெறுங்கண்ணால் பார்க்க கூடாது. அதற்கென தனியே  தயாரிக்கப்பட்ட  சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும். மூன்று அகவைக்குக்  கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பாதுகாப்பற்றது. இது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலே கூறியவாறு ஒரு முழு சூரிய கிரகணம் நிலாவின் வட்டத்தட்டு வானத்திலுள்ள சூரிய வட்டத்தட்டை மறைக்கும் போது ஏற்படுகிறது. இதனால் மிகப் பெரிய சூரியனைவிட சிறியதாகவுள்ள சந்திரன் சூரியனை மறைத்துவிடுகிறது. சூரிய கிரகணம் ஆண்டில்  2 முதல் 5 முறை  இடம் பெற்றாலும் முழுச் சூரிய கிரகணம் சராசரி 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகிறது.

ஒரு காலத்தில் பல்லி சொல்வதைக் கேட்டு தமிழ் மக்கள் பதறினார்கள். பஞ்சாங்கத்தில் பல்லி சொல் பயன் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்கள் சூரிய கிரகணம் சரி, சந்திர கிரகணம் சரி அவை இயற்கை நிகழ்வுகள் என்பதையும் அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதையும்  தங்கள் பிள்ளைகளுக்கு  கற்றுக்  கொடுக்க வேண்டும்.