Aug 08

இறந்த மகனின் பட்டமளிப்பு விழா; கண்ணீரோடு சான்றிதழைப் பெற்ற தந்தை!

கோலாலம்பூர்,  ஒவ்வொரு பெற்றோரின் கனவு தன் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவைக் கண்கூடாகப் பார்ப்பது தான். அந்த நாளுக்காக அவர்கள் காணும் கனவு அளப்பரியதாகும். ஆனால், ஃபவ்சீ நசீருக்கு தன் மகனின் பட்டமளிப்பு விழா பெருமையும் துயரமும் கலந்த ஒரு தருணமாக இருந்தது.

13வது இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் பயிற்சி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் 56 வயதான ஃபவ்சீ நசீர் தன் மகனின் பட்டமளிப்பு சான்றிதழைப் பெற்றார். தொழிலதிபரான அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் பயிற்சி கல்லூரி மாணவர்களுடன் அமர்ந்து தன் மகனைக் கௌரவிக்க அவனது சான்றிதழைப் மன இறுக்கத்துடன் பெற்று கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் அவரின் மகன் முகமட் அமிருல் இசுவான் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். பட்டமளிப்பு விழாவில் அவனால் இருக்க முடியவில்லை என்றாலும் ஓர் அப்பாவாக அவனது கனவை நிறைவேற்றுவது என் கடமை. என் மகன் 3.75 சிஜிபிஏ பெற்று சிறப்பு தேர்ச்சி அடைந்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது என்று மனங்கலங்கிய நிலையில் ஃபவ்சீ நசீர் கூறினார்.

இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் பயிற்சி முடித்தவுடன் டிப்ளோமா கல்வியைத் தொடர வேண்டும் என்று தன் மகன் ஆசைப்பட்டான். அதற்காக பகுதி நேரமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததாகவும் அவர் கூறினார்.

அவனது கடின உழைப்பிற்கு வீண்போகக்கூடாது என்பதற்காகதான் இன்று என் மகனின் பட்டமளிப்பு சான்றிதழை எடுப்பதற்கு வந்தேன் என்று கண்ணீரோடு கூறினார்.