Mar 31

'பிறிக்ஸிட்' பேச்சுவார்த்தைகளுக்கான வழிகாட்டல்கள் விரைவில்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான 'பிறிக்ஸிட்உடன்படிக்கை  குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது என்பதற்கான  வழிகாட்டல் பிரேரணைகளை ஐரோப்பிய சபை தலைவர் டொனால்ட் ரஸ்க்   வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழிகாட்டல் பிரேரணைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம்  வகிக்கும் 27  நாடுகளின் அரசாங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

ஐரோப்பிய ஆணையகம் இந்த வழிகாட்டல் பிரேரணைகளை  தனது இணையத்தளப் பக்கத்தில் நேரடியாக வெளியிட உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

 பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னர்  பிரித்தானியாவானது    தனது வெளியேற்ற நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்  என ஐரோப்பிய  ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

 பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே  கடந்த புதன்கிழமை தனது நாடு  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவது தொடர்பான கடிதமொன்றில் கைச்சாத்திட்டு அந்தக் கடிதத்தை  டொனால்ட் ட்ரஸ்கிற்கு அனுப்பி வைத்து மேற்படி  பிரிவுக்கான செயற்கிரமத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

 இந்நிலையில் டொனால்ட் ரஸ்க் இன்று வெள்ளிக்கிழமை  இந்த விவகாரம் குறித்து மால்ட்டாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வலதுசாரித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 'பிறிக்ஸிட்'   தொடர்பில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடையேும்  இணைக்கப்பாட்டை  எட்டும் முகமாக முன்னெடுக்கப்படவுள்ள பல மாத கால பேச்சுவார்த்தைகளையடுத்து  2019  ஆம் ஆண்டு மார்ச்  இறுதியில்  பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  உத்தியோகபூர்வமாக விலகவுள்ளது.