Aug 07

தெற்காசிய நாடுகளில் தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு கனடா உதவும்!

தீவிரவாத்தினை ஒடுக்கும் நடவடிக்கைளில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு கனடா எப்போதும் உதவிகரமாக விளங்கும் என்று கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

ஆசியான் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று பிலிப்பீன்சில் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதன் இரண்டாம் நாளான் இன்று வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கனடாவின் சார்பில் அவர் இந்த உறுதிமொழியினை வழங்கியுள்ளளார்.

தனது உரையின் ஆரம்பத்தில், பிலிப்பீன்சின் தென் பிராந்தியங்களில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு உயிரிழந்தோருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்ட கிறிஸ்டியா ஃபிறீலான்ட், தென்கிழக்காசிய பிராந்தியத்திலிருந்து தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும் என்பதில் கனடாவும் கடப்பாடு கொண்டதாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிலிப்பீன்சில் முஸ்லிம்களை அதிகமாக கொண்ட தென் பிராந்திய நகரான மாராவியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்த நிலையில், அவர்களை எதிர்த்து இடம்பெற்ற மோதல்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதுடன், நான்கு இலட்சம் பேர் வரையில் இடம்பெயர்நதமை குறிப்பிடத்தக்கது.

இந்த அச்சுறுத்தல் நிலைமை மாராவி நகரையும் தாண்டி சென்றிருக்க கூடும் எனவும், தீவிரவாதிகள் ஏனைய நகர்களையும் தாக்கக்கூடும் எனவும் பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடா எப்போதும் உதவிகரமாக விளங்கும் என்ற உத்தரவாத்தினை, கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தென்கிழக்காசிய நாடுகளுக்கு வழங்கியுள்ளார்.