Aug 06

ஒன்ராறியோவின் மத்திய பகுதியில் சூறைக்காற்று: மின்வினியோகம் துண்டிப்பு

ஒன்ராறியோவின் மத்திய பகுதியான Muskoka பிராந்தியத்தில் வீசிய சூறைக் காற்று காரணமாக அங்கிருந்த மரங்கள் பல முறிந்து வீழ்ந்ததுடன், மின் கம்பங்களும் முறிந்து, மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடிமின்னல் மற்றும் பலத்த மழையுடன், நகரின் வட பிராந்தியத்தினை தாக்கிய இந்த சூறைக்காற்று, கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக Lake of Bays பகுதியிலேயே அதிகளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பெருமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பிராந்தியத்திற்கான துணை நகரபிதா தெரிவித்துள்ளார்.

தற்போது அங்கே நகர பணியாளர்கள் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், நகர நிர்வாக உத்தியோகத்தர்கள் சேதாரங்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு்ளளதாகவும், முழுமையான சேத விபரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளூடான போக்குவரத்துகளை இலகுவாக்கும் வகையில், வீதிகள் சீர் செய்யப்பட்டு விட்டதாகவும், எனினும் வீதி ஓரங்களில் மரங்கள், சேதாரப் பொருட்கள் இருப்பதானால் அவதானமாக வாகனங்களைச் செலுத்திச் செல்லுமாறும் அவர் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மரங்கள் வீழ்ந்து, மின் வடங்கள் அறுந்து போனமையால் ஆயிரக் கணக்கானோருக்கான மின் இணைப்பு நேற்று இரவிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான மின் வடங்களுக்கு அருகேயோ, வீழ்ந்து கிடக்கும் மின் கம்பங்களுக்கு அருகேயோ செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக சுமார் 13,000 வாடிக்கையாளர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போதிலும், இன்னமும் 5,000 பேருக்கான மின் வினியோகமே சீர் செய்யப்பட வேண்டியிருப்பதாக “ஹெட்ரோ வண்” தெரிவித்துள்ளது.