Mar 31

அட! இப்படிக் கூட வரைய முடியுமா?

நைஜீரியாவைச் சேர்ந்த அரின்ஸ் ஸ்டான்லி, புகைப்படத்தைப் போல மனித உருவங்களை வரைவதில் மிகச் சிறந்தவராகத் திகழ்கிறார். பென்சில் மூலம் இவர் வரையக்கூடிய மனிதத் தலை களைக் கண்டு ஆச்சரியத்தில் உறைந்து போகாதவர்களே இல்லை! 

அரின்ஸின் குடும்பம் காகித நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தது. சின்ன வயதிலிருந்து காகிதங்களுடன் பழகியவர், ஒருகட்டத்தில் பொழுது போக்குவதற்காக வரைய ஆரம்பித்தார். 2012-ம் ஆண்டுதான் இவருடைய ஓவியங்கள் தத்ரூப ஓவியங்களாக மாற்றமடைந்தன. அன்றுமுதல் கூடுதல் உழைப்பைச் செலவிட்டார். 

தன்னுடைய ஓவியத் திறமையை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டார். கடந்த ஆண்டு தொழில்முறை ஓவியராக மாறினார். இதுவரை முறையாக ஓவியங்களை யாரிடமும் இவர் கற்றுக்கொண்டதில்லை! “பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்றைத்தான் என்னுடைய மந்திரமாக வைத்திருக்கிறேன். 

இவற்றால்தான் என்னால் மேலும் மேலும் சிறந்த படைப்புகளை உருவாக்க முடிகிறது. ஓவியத்தை முடிப்பதற்கு 200 மணி நேரங்களை எடுத்துக் கொள்கிறேன். பகலில் நான் வேலைக்குச் சென்றுவிடுவதால் இரவில் மட்டுமே வரைய முடியும். எவ்வளவு நேரம் ஆகிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. 

எவ்வளவு நன்றாக வரைய முடியும் என்பதில்தான் கவனமாக இருப்பேன். என்னைச் சுற்றியிருக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பேன். நான் வரையக்கூடிய முகங்களை விதவிதமாகப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வேன். எல்லாவற்றையும் ஆராய்ந்து, அறிந்துகொண்ட பிறகே ஓவியம் தீட்ட ஆரம்பிப்பேன்” என்கிறார் அரின்ஸ். 

புகைப்படத்தைப் பார்த்து வரையும்போது ஒருவரின் தலைமுடி எவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது, எவ்வளவு நீளமாக இருக்கிறது, எந்த வகையான முடி என்றெல்லாம் ஆராய்கிறார் அரின்ஸ்!