Mar 31

ஆயுதப் படைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் நம்பிக்கைத் துரோகம்: மகிந்த சீற்றம்

இலங்கையின் ஆயுதப்படைகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் வரவழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதியும் பிரதமரும் திரும்பத் திரும்ப கூறிவருகின்ற போதிலும் கடந்த வாரம் ஜெனீவாவில் அளிக்கப்பட்ட உறுதிமொழி முற்றிலும் எதிர்மாறானதாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். 

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015, 2017 தீர்மானங்களில் மிகவும் அபாயகரமான விடயமாக அமைந்திருப்பது 2015 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை எந்தவொரு ஆட்சேபனைகளும் இல்லாமல் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பதாகும். அந்த அறிக்கையில் யுத்தத்தில் ஈடுபடாதவர்களை கண்மூடித்தனமாக கொலை செய்தல், சித்திரவதை, வன்புணர்வு, சட்டவிரோதமாக தடுத்து வைத்தல், கடத்தல், மனிதாபிமான உதவியைத் தடுத்தல் உட்பட முழு அளவிலான போர்க்குற்றங்கள் குறித்து அந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.  

அந்த அறிக்கையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொள்வதற்கு எந்தவொரு நிர்ப்பந்தமான காரணமும் இருக்கவில்லை. அவர்களின் சொந்த தேசியத்திற்கு எதிரான போக்கைத் தவிர உயர்ஸ்தானிகரின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான கட்டாயமான காரணம் எதுவும் நல்லாட்சி அரசுக்கு இருந்திருக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 2010 இல் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கைக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்திருந்தார். 

அந்த அறிக்கை 2011 ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது. 2011 இல் வெளியிடப்பட்ட செயலாளர் நாயகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை தனது அரசாங்கம் தீர்க்கமான முறையில் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்ததாக ராஜபக்ஷ கூறுகிறார். அந்த அறிக்கை இருந்ததா என்பது தொடர்பாக எவருமே இன்று ஞாபகத்தில் கொள்வதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  ஐ.நா பாதுகாப்பு சபையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே நாடு ஒன்று தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு ஒன்றை செயலாளர் நாயகத்தினால் நியமிக்க முடியும் என்று மகிந்த கூறியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தின்  அழுத்தத்தின் கீழ், பான்கீ மூன் நிபுணர்கள் குழுவை அமைத்திருந்தார். 

இலங்கை தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க அக்குழு ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாமல் அந்தக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அது ஐ.நா.வின். நடைமுறைகளுக்கு எதிரானதாகும்.   இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கும் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை ஆணைக்குழுவினால் உரிய முறையில் ஏற்படுத்தப்பட்ட அறிக்கை அல்ல என்றும் மகிந்த கூறியுள்ளார்.  

அவரின் அறிக்கையின் முழு விபரம் வருமாறு;  அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு முடிவடைந்துள்ளது. 2015 அக்டோபரில் தாங்கள் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக நல்லாட்சி அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளது.  அதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்களுடன் போர்க்குற்ற நீதிமன்றத்தை அமைப்பதற்கு முன்னர் தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்ட விடயத்தை மீள புதுப்பித்திருக்கிறார்கள்.   நிர்வாக நடவடிக்கைகள் ஊடாக போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட ஆயுதக்குழுவின் உறுப்பினர்களை அகற்றுவதற்காக இது இடம்பெறவுள்ளது.  

நீதித்துறை விசாரணையின் முன்பாக அவர்களைக் கொண்டு செல்வதற்கு போதிய ஆதாரம் இல்லாவிடினும் கூட நிர்வாகத்துறை ஊடாக  இந்த நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றி புதிய சட்டத்தை அதாவது மேற்கு அதிகாரங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு அனுமதி அளிக்கவும் இலங்கையில் ஏனைய பொறிமுறைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. இவை வெளிநாடுகளிலிருந்து நீதியைப் பெற்றுக்கொள்வதற்காகும். எமது ஆயுதப்படைகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வரப்போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் திரும்பத் திரும்பக் கூறி வருகின்றபோதிலும் ஜெனீவாவில் அளித்த வாக்குறுதி எதிரானதாக உள்ளது.  

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை 2014 இல் ஆரம்பமானது.  மனித உரிமைகள் பேரவை விசாரணை ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவரினால் நியமிக்கப்பட்டன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உறுப்பு நாடு ஒன்றின் தலைவராக இருக்கின்றார். ஆனால் இலங்கை விவகாரத்தில் விசாரணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் குழு உயர்ஸ்தானிகரால்  நியமிக்கப்பட்டது. 

அவர் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் அல்ல. 2 ஆம் படி நிலையிலுள்ள அதிகாரியாவார்.  யாவற்றுக்கும்  மேலாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை வருடாந்தம் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மேற்கு நாடுகளிடம் நிதிக்காக அதிகளவிற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தங்கியிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டே ஒவ்வொரு வருடமும் விசாரணைகள் நடைபெறுகின்றன. அதில் அந்த அலுவலகம் அதிகளவுக்கு மேற்கு நாட்டவர்களை அலுவலர்களாக கொண்டிருக்கின்றது. அதனால் தற்போதைய அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை பக்க சார்பாக நடந்து கொள்வதாக கிரமமாக குற்றம்சாட்டப்படும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றின் அறிக்கையை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 

எமது ஆயுதப் படைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனது அரசாங்கம் உலகின் அதி முக்கியமான சட்டம் மற்றும் ஆயுத மோதல் சம்பந்தப்பட்ட நிபுணர்களைக் கொண்டிருந்தது. சேர் ஜோப்றேநைவ்  டெஸ்மன்ட் டி சில்வா, றொட்னி டிக்சன், பேராசிரியர் டேவிட் கிரேம், பேராசிரியர் மைக்கல் நியூட்டன், மேஜர் ஜெனரல் ஜோம் கொன் ஆகிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

எமக்கு எழுத்து மூல அபிப்பிராயங்களை குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இலங்கைக்கு எதிராக திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும்  வழங்குவதற்காக அவர்கள் நியமிக்கப்பட்டனர். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தின் சட்ட மீறல்கள் தொடர்பாக எதுவும் இல்லை என அவர்கள் தமது ஆய்வுகளில் திட்டவட்டமாக எழுதியுள்ளனர்.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்த 6 அறிக்கைகளையும் சமர்ப்பிக்க எனது அரசாங்கம் விரும்பியிருந்தது. ஆனால் 2015 ஜனவரியில் நாங்கள் அதிகாரத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டோம். இந்த ஆவணங்கள் யாவற்றையும் வேண்டுமென்றே இந்த அரசாங்கம் நசுக்கிவிட்டுள்ளது.  

சர்வதேச நிபுணர்களின் இந்த எழுத்து மூல அபிப்பிராயங்கள் நசுக்கப்பட்ட பின்னர் நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு முணுமுணுப்பும் இல்லாமல் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கை கற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போர்க்குற்றத்திற்கும் எங்களை குற்றம்சாட்டுகின்றது. இப்போது அவர்கள் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானங்கள் ஊடாக பரிந்துரைகளை இது நல்லாட்சி அரசாங்கம் தனது சொந்த படைகளுக்கும் மக்களுக்கும் நேரடியாக நம்பிக்கை துரோகம் இழைப்பதாக இது அமைந்திருக்கிறது.