Aug 05

விமானத்தினுள் மோதல்: இடைநடுவில் ரொரன்ரோ திரும்பிய விமானம்

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து ஹங்கேரி நாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் மோதலில் ஈடுபட்டு விமானப் பணியாளருக்கும் காயத்தினை ஏற்படுத்தியதை அடுத்து, குறித்த அந்த விமானம் மீண்டும் ரொரன்ரோவிற்கு திரும்பிய சம்பவம் நேற்று இடம்பெற்று்ள்ளது.

ஹங்கேரிக்கு பயணித்துக் கொண்டிருந்த 57 வயது ஆண் ஒருவரே இவ்வாறு விமானத்தினுள் மோதலில் ஈடுபட்டதாக தமக்கு நேற்று அதிகாலை 12.32 அளவில் முறைப்பாடு கிடைத்ததாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த அந்த பயணியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின்போது, விமானத்தின் ஆண் பணியாளர் ஒருவர் சிறிய காயங்களுக்கு இலக்கானதாகவும், விமானநிலையத்தில் அவசர மருத்துவப் பிரிவினர் அவருக்கான சிகிச்சைகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை ரொரன்ரோவில இருந்து புறப்பட்ட விமானம், மொன்றியலை கடந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பதனை எயர் கனடா நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த அந்த விமானத்தில் 267 பயணிகளும், எட்டு விமான பணியாளர்களும் இருந்ததாகவும், ரொரன்ரோவுக்கு திரும்பிய அந்த விமானத்தில் பயணித்த அனைவரும், பின்னர் பிறிதொரு விமானத்தின் மூலம் பயணத்தினை தொடர்ந்ததாகவும் எயர் கனடா மேலும் தெரிவித்துள்ளது.

விமானத்தில் மோதலில் ஈடுபட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது கொலை அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.