Mar 31

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; மேலும் இருவர் கைது

களுத்துறை பிரதேசத்தில் சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேனை மறைத்து வைத்து உதவி வழங்கிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேலியகொட மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினால் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்கள் மொரட்டுவை மற்றும் பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 48 மற்றும் 51 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருடப்பட்ட வேனுக்கு இவர்களால் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.  பின்னர் குற்றத்தை புரிவதற்காக அந்த வேனை வழங்கியுள்ளதுடன், குற்றச் செயல் இடம்பெற்றதன் பின் போலி இலக்கத் தகடை அகற்றிவிட்டு மீண்டும் உண்மையான இலக்கத்தகடை பொருத்தி மொரகஹஹேன பிரதேசத்தில் வேனை விட்டுச் சென்றுள்ளனர். 

குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட உடைகள் கிதெல்பிட்டிய பிரதேசத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டதாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

அந்த இடத்தில் இருந்து அவர்களால் பயன்படுத்தப்பட்ட 02 போலி இலக்கத் தகடுகள் மற்றும் 06 சப்பாத்து ஜோடிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் 2011ம் ஆண்டு டீ56 ரக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததால் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.