Aug 04

அகதிகள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்ட ஒலிம்பிக் அரங்கம்

அமெரிக்க கனேடிய எல்லைகள் ஊடாக, சட்டவிரோதமாக எல்லை கடந்து கனடாவின் கியூபெக் மாநிலத்தினுள் நுளையும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு, மொன்றியலில் உள்ள ஒலிம்பிக் அரங்கம் பயன்படுத்தப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்த பெருமளவு போட்டியாளர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த அரங்கத்தின் சுமார் 150 தொகுதிகள், இவ்வாறு அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பல்வேறு பேருந்துகளிலும் அங்கு அழைத்து வரப்பட்ட அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களான பெருமளவு ஆண்களும் பெண்களும் அங்கு இறக்கி விடப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான உணவு உள்ளிட்ட உதவிகளை கியூபெக் செஞ்சிலுவைச் சங்க பணியாளர்கள் மேற்கொண்டுவரும் நிலையில், அங்குள்ள கழிப்பறைகள் மற்றும் குளியல் அறைகள் என்பனவும் இவர்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன.

அகதி தஞ்சம் கோரி அமெரிக்காவில் இருந்து இவ்வாறு கனடாவுக்குள் வருகை தந்துள்ளவர்களில் பெருமளவானோர் ஹெயிட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிதாக பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவை விட்டு தாம் நாடுகடத்தப்பட்டுவிடக்கூடும் என்ற அச்சத்திலேயே ஹெயிட்டி நாட்டவர் கனடாவுக்குள் தஞ்சம் நாடி நுளைவதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாவிட்டால், எதிர்வரும் 2018ஆம் ஆண்டினுள் இவ்வாறு சுமார் 60,000 ஹெயிட்டி நாட்டவர் கனடாவுக்குள் நுளைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அகதி தஞ்சம் கோரி வந்தவர்களைத் தங்க வைப்பதற்காக இந்த ஒலிம்பிக் அரங்கம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.