Mar 31

ஜெனீவாவில் இணை அனுசரணை; கொழும்பில் எதிர்ப்பு அரசியல்

- சஞ்சயன் -

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மனம் கடந்த வியாழக்கிழமை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2015 அக்டோபரில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரு வருட கால அவகாசத்தை வழங்குவதாகவே இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதற்கு இணை அனுசரணையை இப்போதும் கடந்த முறையைப் போலவே இலங்கை வழங்கியிருக்கின்றது. இந்த நிலையில் இணை அனுசரணை என்பதை சர்ச்சைக்குள்ளாக்க "கூட்டு எதிரணி" தீர்மானித்திருக்கின்றது.
 
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது இலங்கை அரசாங்கத்தின் பலவீனம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார். சர்வதேச அரங்கில் இலங்கை குறித்து உருவாகியிருந்த பாதகமான நிலை ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் மாற்றமடைந்திருந்தது. சர்வதேச சமூகம் இலங்கை மீதான நெருக்குதல்களைப் பெருமளவுக்குத் தவிர்த்துக்கொண்டது. புதிய அரசாங்கம் காட்டிய சமிஞ்ஞைகளும் இதற்குக் காரணமாக இருந்துள்ளது. குறிப்பாகக இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் கொண்டுவரப்படும் பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு மைத்திரி - ரணில் அரசாங்கம் எடுத்துக்கொண்ட தீர்மானம் ஒரு இராஜதந்திர நகர்வுதான்.

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் ஆட்சிமாற்றத்தின் பின்னர் பெருமளவுக்குக் குறைவடைந்திருக்கின்றது என்பது உண்மை. மைத்திரி - ரணில் தலைமையிலான அரசாங்கத்தை தமது நேச அணியாகவே மேற்கு நாடுகளும் பார்க்கின்றன. அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். அதற்காக ஒரேயடியாக அனைத்தையும் கைவிட்டுவிட முடியாது. மனித உரிமை அமைப்புக்கள், தமிழ் டயஸ்போரா அமைப்புக்களின் அழுத்தங்களுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கின்றது. இனால், தமக்கு எதிராக வரும் தீர்மானங்கள் எதுவும், கடுமையான சொற் பிரயோகங்களைக் கொண்டவையாக இருந்தாலும், நடைமுறையில் ஆபத்தில்லை என்பது இலங்கை அரசாங்கத்துக்குத் தெரிந்தே இருக்கின்றது. இணை அனுசரணையை வழங்க இலங்கை முன்வருவதும் இதனால்தான். அரசாங்கத்தின் நல்லிணக்கச் செயற்பாடுகளை அமெரிக்கா புகழ்ந்திருப்பது இந்தப் பின்னணியில்தான்.
 
இலங்கை அரசியலிலும் செல்வாக்கைச் செலுத்தும் விடயமாக ஜெனீவா இருந்துவருகின்றது. மகிந்த ராஜபக்‌ஷவால் முடியாததை தாம் சாதித்திருப்பதாக மைத்திரி - ரணில் அரசாங்கம் 2015 அக்டோபர் தீர்மானம் வந்தபோது சொல்லிக்கொண்டது. இப்போதும் அதேபோன்ற ஒரு கருத்துத்தான் சொல்லப்படுகின்றது. இராஜதந்திர வழிமுறைகளில் மேற்கு நாடுகளை வெற்றிகொண்டுவிட்டதாக அரசாங்கம் சொல்லிக்கொள்கிறது. இப்போது காலஅவகாசத்தைப் பெற்றுக்கொள்வதில் கிடைத்திருக்கும் வெற்றியை உள்ளுர் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்வதுதான் அரசாங்கத்தின் தேவையாகவுள்ளது. மேற்கு நாடுகளுடன் இன்றைய அரசுக்குள்ள நெருக்கமான உறவுதான் இந்த வெற்றிக்குக் காரணம்.

அத்துடன் காலஅவகாசத்தைக் கொடுப்பது மேற்கு நாடுகளுக்கும் தேவையானதாகவே இருந்துள்ளது. அதனைத் தவிர்த்தால் அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டியிருக்கும். அது இலங்கைக்கு மட்டுமன்றி மேற்கு நாடுகளுக்கும் நெருக்கடியைக் கொடுக்கக்கூடியது. காலஅவகாசத்துக்கு மேற்கு நாடுகள் இணங்கிவந்தது இதனால்தான். 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் மாற்றங்கள் எதையும் செய்யாத அதேவேளையில், அதில் குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றுவதற்காகத்தான் இப்போது கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 2019 மார்ச் வரையில் அவகாசத்தைப் பெற்றுள்ள அரசாங்கம், காலத்தைக் கடத்துவதற்கும் வடக்கை சிங்கள மயமாக்கவும்தான் இந்தக்காலப் பகுதியைப் பயன்படுத்தும் என நிச்சயமாக நம்பலாம்.

இந்தப் பின்னணியில் ஜெனீவாவை மையப்படுத்தி அரசாங்கத்தை சங்கடத்துக்குள்ளாக்க இரண்டு விடயங்களை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான கூட்டு எதிரணி கையில் எடுத்திருக்கின்றது. அதில் ஒன்றுதான் இணை அனுசரணை வழங்கியதற்கு எதிரான தாக்குதல். இரண்டாது, சர்வதேச நீதிபதிகள் வருவதால் ஆபத்து என்ற பிரச்சாரம். இதற்கு மேலாக கால அவகாசம் வழங்குவது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மகிந்த அணியின் முக்கியஸ்த்தரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்  புதிய கோணத்தில் பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்திருக்கின்றார். இந்த மூன்று விடயங்களையிட்டும் பார்க்கும் போது ஒரு விடயம் ளெிவாகத் தெரிகின்றது. உண்மைக்குப் புறம்பான அரசியல் நோக்கத்துடனான பிரச்சாரங்களே இவை. சிங்கள மக்கள் மத்தில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த இனவாதத்தை கையில் எடுப்பதற்கு அவர்கள் தயாராக இருப்பதை இது புலப்படுத்தியிருக்கிறது.

"அனைத்துலக அரங்கில் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் கிடைத்துள்ள வாய்ப்புகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அதிகாரிகளான நிஷா பிஸ்வால், சமந்தா பவர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தீர்மானம் மீது தமக்கு அக்கறையில்லை என்பதை அமெரிக்கா தெளிவாக காண்பித்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம், அதனை தள்ளிக் கொண்டு சென்றிருக்கிறது. இது இலங்கை அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பலவீனம்" என கோதாபாய ராஜபக்‌ஷ கொழும்பில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் வைத்து வெளிவிவகார அமைச்சரை விமர்சித்திருக்கின்றார். தீர்மனத்துக்கு இணை அனுசரணை வழங்கும் அரசாங்கத்தின் முடிவை விமர்சித்தே இதனை அவர் கூறியிருக்கின்றார்.

இதற்குப் பதிலளிப்பதுபோல வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் கருத்து அதனைவிட ஆச்சரியமானது. பிரேரணைக்கு திருத்தங்களை முன்வைக்கப்போவதில்லை என்பதை அவர் சொல்லியிருந்தார். அத்துடன் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து பிரேரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு அரசியலமைப்பில் மாற்றஞ்செய்யப்பட வேண்டும். அது சாத்தியமில்லை என அவர் சொல்லியிருக்கின்றார். அதற்காக சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என அவர் நம்புகிறார். அந்த நம்பிக்கை யதார்த்தமானதாக இருக்கலாம். ஆனால், பிரேரணையிலுள்ள பிரதான விடயத்தையே நடைமுறைப்படுத்தப்போவதில்லை எனச் சொல்லிக்கொண்டு அதற்கு இணை அனுசரணையும் கொடுக்கும் வல்லமை இலங்கைக்கு மட்டும்தான் இருக்கும். இது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளையே கேலிக்கூத்தாக்குவதாக இருக்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அண்மைக்காலமாகத் தெரிவித்துவரும் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை சவாலுக்கு உட்படுத்துவதாக இருக்கின்றது. போரை வெற்றிகொண்ட வீரர்களை தான் விசாரணைக்கு உள்ளாக்கப்போவதில்லை என புதன்கிழமை அவர் கொழும்பில் தெரிவித்திருக்கின்றார். கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணம் சென்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இதே கருத்தைத்தான் அங்கு முன்வைத்தார். இவை அனைத்தும் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிரானவை. இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து தீர்மானத்தை நிறைவேற்றிய மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றன?