Aug 03

6 வயது மகனை கொலை செய்த தந்தை – தற்கொலை

6 வயது சிறுவன் ஒருவரை கொலை செய்த அந்த சிறுவனின் தந்தை, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஈஸ்ட் யோர்க் பகுதியில் திங்கள் இரவு இடம்பெற்றுள்ளது.

புரோட்வியூ அவினியூ மற்றும் கொஸபேர்ன் அவனியூ பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து, திங்கட்கிழமை இரவு ஏழு மணியளவில் இது தொடர்பிலான முறைப்பாடு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்த போது, அங்கு குறித்த அந்த சிறுவனும் அவரது தந்தையும் எந்தவித உணர்வுகளும் அற்ற நிலையில் காணப்பட்டதாகவும், இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அந்த ஆறு வயது சிறுவனின் தயார் அங்கு காணப்பட்டதாகவும், அவர் தமது விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் ரொரன்ரோவைச் சேர்ந்த 58 வயது சிலாட்டான் சிக்கோ மற்றும் ஆறு வயதான சைமன் சிக்கோ என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அந்தச் சிறுவனின் தாயார் எழுப்பிய கூக்குரலை அடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, இவ்வாறான ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளதை கண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.