Aug 03

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் Dr. த. ஜீவராஜ் கௌரவிப்பு

தம்பலகாமத்தில் பிறந்து  தற்போது திருகோணமலையில் வசித்துவரும்  Dr. த. ஜீவராஜ் தம்பலகாமம் சாரதா வித்தியாலயம், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம், திருகோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன். யாழ்ப்பாண மருத்துவபீடத்தில் MBBS கற்கைநெறியை 2006 இல் பூர்த்தி செய்த இவர் College of General Practitioners of Sri Lanka இன் குடும்பநல மருத்துவத்திற்கான MCGP Diploma இனை 2016 இல் நிறைவு செய்தவர்.

1991 ஆம் ஆண்டுமுதல் பத்திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும் எழுதிவரும் இவரது ஆக்கங்கள் வீரகேசரி, மித்திரன் வாரமலர், தினமுரசு , சங்குநாதம் , இளவரசி , மலைமுரசு , கலைக்கேசரி  என்பனவற்றோடு  மாவட்ட, மாகாண இலக்கிய மலர்கள் என்பனவற்றிலும் கவிதை, சிறுகதை, வரலாற்றுக் கட்டுரைகளாக வெளிவந்திருக்கின்றன. இவரது சமுக சேவைகளைப் பாராட்டி  அகில  இலங்கை   இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு சாமஸ்ரீ தேசமானிய விருதினை  2013 ஆண்டில் வழங்கி கௌரவித்தது. 

தொல்லியல், வரலாறு  ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் இயங்கிவரும் இவர்  2008 ஆம் ஆண்டு முதல் www.geevanathy.com  எனும் வலைப்பதிவில் திருகோணமலைத் தமிழர் வரலாறு தொடர்புடைய ஆதாரங்களைப் பதிவு செய்து வருகிறார்.

02.08.2017  இல் கல்முனையில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2017 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆவணமாக்கல் துறைக்காக இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.