Aug 03

பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீயில் எரிந்த வீடுகள் 300க்கும் அதிகம்!

அண்மைய காலமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள காட்டுதீ அனர்த்தம் காரணமாக, 300க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் எரிந்து அழிந்து போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல இடங்களிலும் காட்டுத்தீ ஏற்படக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்துவதிலும் புகை மூட்டம் கடும் சவாலாக விளங்குவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அழிவடைந்து போனதாக அடையாளம் காணப்ப்ட்டவற்றில் 71 வீடுகளும், 116 கட்டிடங்களும், மூன்று வர்த்தக நிலையங்களும் அடங்குவதாகவும், மேலும் 115 கட்டிடங்கள் அழிவடைந்தள்ள நிலையில், அவை இன்னமும் அடையாளம் காணப்படவிலலை எனவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கரிபோ பிராந்திய மாவட்டம், தோம்சன் நிக்கோலா பிராந்திய மாவட்டம், அஷ்கிராஃப்ட் பழங்குடியின மக்கள் பிராந்தியம் ஆகியனவே இந்த காட்டுத்தீப் பரவலால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் உட்கட்டுமானங்கள் முற்றாக அழிவடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏப்ரல் மாதம் முதலாம் நாளில் இருந்து ஆரம்பமான இந்த காட்டுத்தீ அனர்த்தத்தில், இதுவரை 840க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீப் பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அவற்றால் சுமார் 4,260 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு எரிந்து அழிந்து போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.