ரொரன்ரோவில் துப்பாக்கித் தாக்குதலில் ஒருவர் பலி, நால்வர் படுகாயம்
ரொரன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
ஷேர்போர்ன் வீதி மற்றும் குயீன் வீதிப் பகுதியில், நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பர்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து, தாம் சம்பவ இடத்துக்கு விரைந்த போது, அங்கே மூன்று பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்து விட்டதையும், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதனையும் அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் இரண்டு நபர்கள் காயமடைந்திருக்கக்கூடும் எனவும், அவர்கள் தானாகவே மருத்துவமனைக்கு சென்றிருக்க கூடும் என்று தாம் நம்புவதாகவும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விசாரணைகள் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் சிறிதளவு விபரங்களை மட்டுமே வெளியிட்டுள்ள அதிகாரிகள், இன்று மேலதிக விபரங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.