Aug 02

அரசியலில் இருந்து விலகினார் கிறிஸ்டி கிளார்க்

பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் முதல்வர் கிறிஸ்டி கிளார்க், அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்துள்ளதாக அறவித்துள்ளார்.

நீண்ட காலமாக பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆட்சியில் இருந்துவந்த லிபரல் கட்சி, அண்மையில் நடைபெற்று முடிந்த மாகாண தேர்தலில், புதிய சனநாயக கட்சி மற்றும் பசுமைக்கட்சிக் கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றே அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் மனோநிலை தனக்கு ஏற்பட்டதாகவும், எனினும் அவ்வாறானதொரு முடிவினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததாகவும் கிறிஸ்டி கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தான் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்குவதான முடிவினை வெளியிட்டுளள் 51 வயதான கிறிஸ்டி கிளார்க், தற்போதுதான தன்னால் நின்மதியாகவும், சிக்கல்களில் இருந்து விடுபடடதாகவும் உணர முடிவதாகவும் கூறியுள்ளார்.

அரசியல்வாதியாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பினை தனது மகன் சகிதம் நடாத்திய அவர், கடந்த ஆறரை ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்தமை ஒரு அற்புதமான பயணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், பொது வாழ்க்கையில் இருந்தும் விடுபடுவதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை காலை நீணடநேர பரிசீலனையின் பின்னர், அரசியலில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்ற முடிவினை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் வரையில் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாகவே இருந்த போதிலும், தனது இந்த விலகல் மூலம், கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி தன்னைப் புதுப்பித்துக்கொண்டு சட்டமன்றில் சிறந்த எதிர்க்கட்சியாக திகழும் என்று நம்புவதாகவும் கிறிஸ்டி கிளார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவரின் இந்த பதவி விலகல் காரணமாக லிபரல் கட்சி சட்டமன்ற ஆசனம் ஒன்றினை இழக்கும் நிலையில், இவரிடம் இருந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்த்ல் எதிர்வரும் ஆறு மாதங்களுள் நடாத்தபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.