Mar 30

கீத் நொயர் விவகாரம்; இராணுவ புலனாய்வு வீரர் அறுவருக்கும் பிணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற்றும் நெயார் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு வீரர்கள் அறுவரையும் பினையில் விடுதலை செய்ய கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டார்.

 

இந்த விவகாரத்தின் அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்த நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முறைப்பாட்டாளரான ஊடகவியலாளர் கீத் நொயார் வருகை தராமை , அவர் இவ்வழக்கு தொடர்பில் அக்கறைக் கொள்ளவில்லை என்பதை பிரதிபலிப்பதாக சுட்டிக்காட்டிய நீதிவான் அடையாள அணிவகுப்பை ரத்து செய்து சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

 


எனினும் கம்பஹா நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும்  ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீதான தாககுதல் தொடர்பிலான வழக்கிலும் குறித்த அறுவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அவர்களை எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு அந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என குற்றப் புலனாயவுப் பிரிவினர் மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவிடம் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.