Mar 30

சாட்சியமளிக்க சவேந்திர சில்வாவை அழைக்கவேண்டும்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்  உள்ளிட்ட பன்னிரண்டு  பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை  இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது   மன்றில்  முன்னிலையாகி சாட்சியமளித்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன, 

சரணடைத்தவர்கள் தொடர்பில் எதுவும் தெரியாது எனவும் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் 58வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே  இருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கு தொடுனர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரத்னவேல்,

அப்படியானால் சரணடைந்தவர்கள் தொடர்பில் மன்றில் சாடசியம் அளிக்கவும் போரில் சரணடைந் விடுதலைப்புலிகள் தொடர்பான முக்கிய சாட்சியமாக  ஓய்வுபெற்ற 58 வது படைப்பிரிவின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றுக்கு  அழைக்கவேண்டுமென நீதிமன்றத்திடம் வேண்டுகோளினை முன்வைத்தார்.

சட்டத்தரணி  ரத்னவேலின் வேண்டுகோளுக்கு  எதிர்ப்பு வெளியிட்ட இராணுவத்தரப்பில் முன்னிலையான  சட்டத்தரணி அவ்வாறு சவேந்திர சில்வாவை அழைக்கமுடியாது எனவும் அவர் இந்த வழக்கில் தொடர்புபடவில்லை எனவும் வழக்குத்தொடுநர் தரப்பு சட்டத்தரணி வழக்கை  திசை திருப்ப முனைகின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் குறுக்கிட்ட  வழக்கு தொடுனர் தரப்பு சட்டத்தரணி ரத்னவேல் இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் 58வது படைப்பிரிவின் கட்டளையதிகாரியாக மேஜர் ஜெனரல் சவெந்திர சில்வாவே செயற்பட்டார் எனவும் எனவே அவரை இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க மன்றுக்கு அழைக்கவேண்டும் என மன்றுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்து  குறித்த விண்ணப்பம் தொடர்பான கட்டளைக்காக இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.