Aug 01

மொசூலில் எங்கள் வேலை இன்னும் முடியவில்லை: கனேடிய படையதிகாரி தெரிவிப்பு

ஈராக்கின் மொசூல் நகர்ப்பகுதியில் எங்கள் வேலை இன்னமும் முடியவில்லை என ஈராக் படையினருடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போராடிவரும் கூட்டணிப்படையில் அங்கம் வகிக்கும் கனடாவைச் சேர்ந்த படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மொசூல் நகர் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அங்கு மோதல்கள் இடம்பெறாவண்ணம் கனேடியப் படையினர் பாதுகாப்பை ஏற்படுத்துவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஈராக்கில் நிலைகொண்டுள்ள கனேடிய துருப்பினரின் வான்படை கட்டளையிடும் அதிகாரியும், கூட்டு இராணுவத்தின் தற்காலிக கட்டளையிடும் அதிகாரியுமான கேர்ணல் ஜசன் கென்னி தெரிவிக்கையில், தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகர் மீட்கப்பட்டமை மைல்கல்லான விடயம். இந்த மோதல்களில் கனேடிய படையினரின் பங்களிப்பு அளப்பரியது. ஈராக் முழுவதும் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கனேடியப்படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

ஈராக்கிற்கு தொடர்ந்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொலைபேசி ஊடாக வழங்கிய செவ்வி ஒன்றின் போதே கேர்ணல் ஜசன் கென்னி இந்த விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.