Aug 01

பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ: நேரில் பார்வையிடுகிறார் பிரதமர்

 பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானிக்கவுள்ளார்.

அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ நிலவரம் நேரத்துக்கு நேரம் மாற்றம் கண்டுவரும் நிலையில், இன்று பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு சென்று, அங்கு பாதிக்கப்பட்டவர்களையும், உதவி, நிவாரண, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோரையும், தீயணைப்பு பணிகளில் தீவிரமாக செயற்பட்டு வருவோரையும் அவர் நேரில் சந்திக்கவுள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கான இந்த பயணத்தின் பேர்து, பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன், காட்டுத்தீ மீட்பு நடவடி்ககைகளை நிர்வகிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, நெஞ்சாலை ஊடான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், பெரும் சிரமங்களின் மத்தியில் 10,000 மக்கள் இடம்பெயர்வைச் சந்தித்த வில்லியம்ஸ் லேக் பகுதிக்கும் இவர்கள் பயணிக்கவுள்ளனர்.

வில்லியம்ஸ் லேக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காட்டுத்தீ கட்டுப்பாட்டு கட்டளை மையத்திற்கு சென்று, அங்கு இராணுவத்தினர் மற்றும் மத்திய காவல்த்துறையினரைச் சந்திக்கவுள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், பின்னர் ஆகாய மார்க்கமாக காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலாக பறந்து நிலைமைகளை அவதானிக்கவுள்ளனர்.

குறித்த இந்த பகுதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்கள், தற்போது கடநத ஓரிரு நாட்களாக தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த பயணம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.