Jul 31

25 பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்த மதத் தலைவர் மீது சட்டம் பாய்ந்தது!

ஒரே நேரத்தில் 25 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த கனடா நாட்டு மதத் தலைவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவருக்கு மொத்தம் 145 பிள்ளைகள்  இருக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசித்து வரும் இனக் குழுவினரின் பெயர் ‘மோர்மோன்’ என்பதாகும். இவர்களிலிருந்து ‘லாட்டர் டே ஸைண்ட்ஸ்’ என்ற சிறு குழுவினரின் தனியாகப் பிரிந்து சென்று தங்களை இயேசு ஆலய வழிபாட்டு முறையினைப் பின்பற்றுபவர்கள் என அறிந்துக் கொண்டனர்.

இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்து கொள்வதில் நம்பிக்கை உடையவர்கள். இந்தப் பிரிவைச் சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் (வயது 60) மற்றும் ஜேம்ஸ் வூலர் (வயது 55) என்ற இருவர் மீது கனடா நாட்டு பலதார திருமணச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வின்ஸ்டன் 25 பெண்களையும், ஜேம்ஸ் 5 பெண்களையும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும், தற்போது தான் தெளிவான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பில், வின்ஸ்டன் மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் பல பெண்களுடன் வாழ்ந்து வருவது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது, விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

கனடா நாட்டு சட்டப்படி இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. தன்னுடைய மத நம்பிக்கையின் படி இவை அனைத்தும் ‘தெய்வீகத் திருமணங்கள்’ எனக் கருத்து தெரிவித்துள்ள வின்ஸ்டன், கனடா நாட்டு பலதாரச் சட்டத்தினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.