Jul 31

கனேடிய டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகள் காணாத உச்சத்தில்!

அமெரிக்க டொலருக்கு எதிரான கனேடிய டொலரின் பெறுமதி இரண்டு ஆண்டுகள் காணாத உச்சத்தினை தற்போது தொட்டுள்ளது.

நாணைய வர்த்தகத்தின் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 100 கனேடிய டொலர் 80.55 அமெரிக்க டொலர்கள் என்ற பெறுமதியைத் தொட்டு பின்னர் 80.4 டொலர்கள் என்ற அளவில் நிலை கொண்டுள்ளது.

கடந்த மே மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதமாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்ட போதிலும், அது 0.6 சதவீதமாக பதிவான நிலையில், கனேடிய டொலரின் பெறுமதியும் சாதகமான நிலையினை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளின் முன்னர் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி, கனேடிய டொலரின் பெறுமதியை வெகுவாக பாதித்திருந்த நிலையில், அதிலிருந்து கனேடிய பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கான அண்மைய சான்றாக இந்த நாணய பெறுமதி அதிகரிப்பு நோக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், கனேடிய பொருளாதாரம் இந்த ஆண்டின் இறுதியில் சிறந்த நிலையினை எட்டும் என்று கனேடிய மத்திய வங்கியின் நிபுனர்களும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டில் கனடாவின் பொருளாதாரம் 4.6 சதவீதத்தினால் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், 2000ஆம் ஆண்டின் பின்னர் ஒரு ஆண்டில் இடம்பெற்றுள்ள வேகமான வளர்ச்சி இது என்பதையும் பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.