Mar 30

அட, ரொம்ப ஜாலியான வேலை!

ரஷ்யாவைச் சேர்ந்த 26 வயது அன்னா செர்டன்ட்சேவா, முழுநேர சோஃபா பரிசோதகராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார். தினமும் 10 மணி நேரம் விதவிதமான சோஃபாக்களில் அமர்ந்து, படுத்து, வசதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொடுக்கிறார். 

கடந்த மாதம் ரஷ்யாவின் மிகப் பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனம் MZ5 சோஃபா பரிசோதகர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தது. 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன. பல கட்டங்களாகத் தேர்வு நடத்தப்பட்டு, 7 பேர் நேர்முகத் தேர்வுக்குத் அழைக்கப்பட்டனர். இதில் அன்னாவுக்கு வேலை கிடைத்துவிட்டது. 

“கடுமையான போட்டிக்கு நடுவே எனக்கு வேலை கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். என் கனவு வேலை இது. சோஃபாக்களை இன்னும் முன்னேற்ற பல யோசனைகள் வைத்திருக்கிறேன். வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைப் போக்குவதும் சோஃபா அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று பரிசோதித்து சொல்வதும்தான் என் வேலை. 

நேரடியாக வாடிக்கையாளர்களைச் சந்திக்கும்போது அவர்களின் தேவை, எதிர்பார்ப்புகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் நிறுவனத்தையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறேன். தினமும் விதவிதமான சோஃபாக்களில் அமர்வதும் படுப்பதும் பரிசோதிப்பதுமாக வேலை சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார் அன்னா. 

மூன்று மாதங்களுக்குப் பிறகே அன்னாவின் வேலை நிரந்தரமாக்கப்படும். 65 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகிறார் அன்னா.