Mar 01

கன்சாஸ் துப்பாக்கிச் சூடு, யூதவெறுப்பு தாக்குதல்களுக்கு ட்ரம்ப் கண்டனம்: நாடாளுமன்றில் உரை

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ட்ரம்ப், கன்சாஸ் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், யூத மதத்தவர் மீது நடத்தப்படும் இனவெறுப்பு தாக்குதல்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதிபராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ட்ரம்ப் பேசும் முதல் உரை இதுவாகும்.


ட்ரம்ப் உரையின் முக்கிய அம்சங்கள்


* கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதுதவிர, ஆங்காங்கே யூத வெறுப்பு தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தருணம் நமக்கு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்துகிறது. வெறுப்பையும், தீயவற்றையும் எதிர்ப்பதில் அமெரிக்கா எப்போதும் ஒன்றுபட்டு செயல்படும் என்பதை நமக்கு இச்சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன.


* என்னுடைய தலைமையிலான அரசு, இஸ்லாமிய தீவிரவாதத்திலிருந்து அமெரிக்காவை பாதுகாக்கும்.


* அமெரிக்க ராணுவத்திலுள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் போரை தடுக்கக்கூடிய கருவிகளை அளிக்க வேண்டும். இதன் காரணமாகவே என்னுடைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பலனை வீரர்கள் தேச பாதுகாப்பு வாயிலாக உணர்த்துவார்கள்.


* அமெரிக்காவுக்கு நல்லிணக்கமும், பாதுகாப்பும் அவசியமே தவிர போரும், மோதலும் அல்ல. நாம் சமாதானத்தையும், அமைதியையும் எங்கும் காண வேண்டும் .அமெரிக்காவின் சக்தியை புதுப்பிக்குமாறு அனைத்து குடிமகன்களிடமும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது ஒன்றே அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக்கும்.


* வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்களின் குற்றத்தால் பாதிக்கப்படும் அமெரிக்கர்களுக்கு சேவை செய்ய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


* குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்கா நிச்சயம் குரல் கொடுக்கும். என்னுடைய தலைமையிலான புதிய அரசு மக்களுக்காக நிச்சயம் குரல் கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறேன். எனவே மக்கள் ஊடகங்கள் அளிக்கும் பொய் செய்திகளை புறக்கணியுங்கள்.


* அமெரிக்கா குறைந்த திறமையின் அடிப்படையிலான குடியேற்ற அமைப்பை விட்டு மாற வேண்டும். அதற்கு பதிலாக, தகுதியின் அடிப்படையிலான குடியேற்ற முறையை ஏற்க வேண்டும்.


* அமெரிக்க அதிபர் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, உள் நகரங்களின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


* கல்வி என்பது பொதுமக்களுக்கான உரிமை பிரச்சினையாக இக்காலத்தில் உள்ளது. நான், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்காக கல்வி மசோதாவைக் கோர உள்ளேன். அனைத்து அமெரிக்க குழந்தைகளும் பாதுகாப்பான சமூகத்தில் வளர்ந்து, சிறந்த பள்ளிக் கூடங்களில் பயின்று அதிக சம்பளம் பெறும் பணிகளைப் பெற வேண்டும்,


* நமது வேலை வாய்ப்புகளை காலி செய்த டிரான்ஸ்-பசிபிக் கூட்டுறவு ஒப்பந்தத்தை அமெரிக்கா திரும்பப்பெறும்.


* போதை பொருட்களால் விஷமாகிப்போன நமது இளைஞர்களை மீட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் விரிவுப்படுத்தப்படும்.