Jul 30

கொன்டெய்னரில் கனடாவுக்குள் வந்த நால்வர்

கப்பல் மூலமான சரக்கு கொள்கலனில் கனடாவுக்குள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட நால்வர் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மொன்றியல் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர், கடந்த 20ஆம் நாள் காலை ஏழு மணியளவில் யாரோ உதவிக்கு அழைக்கும் சத்தத்தின கேட்டதுடன், கொள்லன் ஒன்றிலிருந்து சிறிய வெள்ளைக் கொடி ஒன்று அசைக்கப்படுவதையும் அவதானித்துள்ளார்.

அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட கனேடிய எல்லைப் பாதுகாவல் அதிகாரிகள், அங்கிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த நான்கு ஆண்களையும் மீட்டிருந்தனர்.

யோர்ஜியாவில் இருந்து வந்திருந்த அந்த நால்வரும், உணவு தண்ணீர் இன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும், அனைவரும் 30இலிருந்து 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் பல நாட்களாகவே அந்த கொள்கலனினுள் இருந்திருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள், தமது அகதி தஞ்சக் கோரிக்கையை முன்வைப்பதற்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் இவர்கள் கனடாவுக்குள் வந்தமைக்கான காரணங்கள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த நால்வரிடமும் செல்லுபடியாகக்கூடிய கடவுச் சீட்டுகள் இருந்ததாகவும், அவர்கள் நால்வரும் கனடாவில் அகதிக் கோரிக்கையை முன்வைப்பதற்கு தகுதி உடையவர்கள் என்பது இனங்காணப்பட்டுள்ளதாகவும் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.