Jul 29

வேலை நிறுத்தம்: ரொரன்ரொ விமானநிலைய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படக்கூடும்?

ரொரன்ரோ பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தில் பொதிகளை கையாளும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேற்று இரவிலிருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு்ளளனர்.

பணியாளர்கள் தரப்பு தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இறுதிக் கோரிக்கையையும் தொழில் வழங்குநர்கள் நிராகரித்துவிட்ட நிலையில், நேற்று இரவு 10 மணியில் இருந்து அவர்கள் இந்த பணிப் புறக்கணிப்பினை ஆரம்பித்துள்ளனர்.

விமான நிலையத்தின் பயண பொதிகள் மற்றும் சரக்கு கொள்கலன்களை கையாளும் ஊழியர்கள் மற்றும் விமான சுத்திகரிப்பு பணியாளர்கள் என்று சுமார் 700 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

பியர்சன் அனைத்துலக விமான நிலையத்தின் ஊடாக சேவையில் ஈடுபடும் 74 விமான நிறுவனங்களில், 30 விமான நிறுவனங்களுக்கான பணிகளில் குறித்த இந்த தொகுதி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக விமான பயணிகள் பலரது பொதிகளும் உரிய முறையில் கையாளப்படாது கைவிடப்பட்டமையால், நேற்று இரவிலிருந்து விமானநிலைய நடவடிக்கைகளில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இன்று வெள்ளிக்கிழமை வழக்கமாகவே அதிக அளவு பயணிகள் விமான நிலையத்தினை பயன்படுத்துவார்கள் என்பதனால், விமானநிலைய நடவடிக்கைகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.