Jul 28

மறைக்க முடியாமல் மீண்டெழுந்த தமிழனின் வரலாறு!

மறைக்க முடியாமல் மீண்டெழுந்த தமிழனின் வரலாறு : கீழடி நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கும் முந்தையது என ஒப்புக்கொண்ட மத்திய அரசு..!

கீழடி நாகரிகம் 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மிகப்பழமையான நாகரிகம் என்பது அகழாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.ஆனால், கீழடியில் நடைபெற்ற அகழாய்வை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும், தமிழர்களின் நாகரிகத்தை திரித்து, வரலாற்றை மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக, தமிழ் அமைப்புகளும் குற்றம் சாட்டின.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தற்போது பதிலளித்துள்ளார்.

அதில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டுகள் பழமையானது என்றும், மற்றொன்று 2,220 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறியுள்ளார்.மேலும், இந்த பொருட்களை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் நிறுவனம் ஆய்வு செய்து, முடிவை வெளியிட்டிருப்பதாகவும் கூறினார்.

இதன்மூலம், தமிழனின் பாரம்பரியம் பழமையானது என்பதை, மறைக்க முடியாமல் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.