Jul 28

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சிறுவன்

நேற்று அதிகாலை இடம்பெற்ற காவல்துறையினருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் பதின்மவயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில், பிரிட்டானியா வீதி மற்றும் கிறடிட்வியூ வீதிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக வளாகம் ஒன்றில் கொள்ளை இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.

சம்பவ இடத்தினைச் சென்றடைந்த அதிகாரிகளுக்கும், அங்கிருந்த பதின்மவயது சிறுவன் ஒருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டதாகவும், அதன்போது அந்த இளைஞரை காவல்துறையினர் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் 15 அல்லது 16 வயதுடையவர் எனவும், அவரது உடல் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் காணப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் அவர் சுவாசித்தவாறும், சுய நினைவுடனும் காணப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த அந்த வர்த்தக வளாகப் பகுதியில், துப்பாக்கியுடன் காணப்ப்ட்ட நபர் ஒருவர், அங்கு வானத்தினை நிறுத்திவிட்டு நின்ற பெண் ஒருவரை அணுகியதாகவும், துப்பாக்கிதாரி காரின் கதவை திறக்க முற்பட்ட வேளையில் அங்கிருந்து தப்பிச் சென்ற பெண் வழங்கிய தகவலை அடுத்தே காவல்துறையினர் அங்கு விரைந்ததாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கினற்ன.

இவ்வாறான நிலையில் இந்த சம்பவத்துடன் வேறு சந்தேக நபர்களும் தொடர்பு பட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், இதில் மேலும் இருவர் தொடர்பு பட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த இந்த சம்பவத்தில், பிராந்திய காவல்துறையினர் தொடர்புபட்ட நடவடிக்கையில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளமையால், அதுகுறித்த விசாரணைகளில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.