Mar 29

'2.0' அப்டேட்: ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிட திட்டம்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் '2.0' படத்தை, ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரதான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தியளவில் இதன் காட்சியமைப்புகளும், கிராபிக்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று முதலிலேயே திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியிட்டால், இப்படத்தின் தரம் மேலும் பேசப்படும் என்பதால், அதற்கான பணிகளையும் மேற்கொள்ள சொல்லியுள்ளார் ஷங்கர் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

ஏப்ரல் 14-ம் தேதி '2.0' படத்தின் டீஸரை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.