Jul 27

திருடிச் செல்லப்பட்ட வாகனம் காவல்துறை வாகனத்துடன் மோதுண்டு விபத்து

திருடிச் செல்லப்பட்ட வாகனம் ஒன்று காவல்துறையினர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டு்ளளனர்.

நேற்று மாலை 5.45 அளவில், மிசிசாகாவின் கிங் வீதி மற்றும் கமீலா வீதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அருகே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்ற வேளையில், அங்கு பதின்மவயது இளைஞர் குழு ஒன்று சொத்துக்காளை சேதமாக்கியவாறு காணப்பட்டதாகவும், அவர்களிடம் திருடப்பட்ட வாகனம் ஒன்றும் இருந்தததாகவும் பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளைக் கண்ட குறித்த அந்த குழுவினர், திருடப்பட்ட அந்த காரில் ஏறித் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், குறித்த அந்த கார் காவல்துறையினரின் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

அந்த வாகனத்தின் சாரதி, மீண்டும் வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற வேளையில், மீண்டும் மோதி விபத்துக்குள்ளானதாகவும், எனினும் இதன்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தினை அடுத்து இருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், மேலும் ஒருவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.