Jul 27

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி: அமைச்சர் ரால்ஃப் குட்டேல்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பரவிய காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளுக்கான நிதி உதவியினை மத்திய அரசு வழங்கும் என மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரால்ஃப் குட்டேல் தெரிவித்துள்ளார்.

நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அந்த நிதி கையாளப்படும் என அவர் மேலும் கூறினார்.

அத்துடன் காட்டுத்தீ பரவலின் மிகவும் ஆரம்ப கட்ட அச்சுறுத்தல்களையே பிரிட்டிஷ் கொலம்பியா தற்போது எதிர்நோக்கி வருவதாகவும், இன்னமும் அபாயகரமான, சிரமமான நிலைமைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் வரையிலான நிலவரப்படி சுமார் 45,000 பேர் இடம்பெயர்ந்திருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி இன்னமும் இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 வரையில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.